Chennai Building Collapse: அண்ணாசாலை விபத்து: ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர், ஓட்டுனர் கைது - போலீஸ் அதிரடி
சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக பொக்லைன் இயந்திர உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாசாலையில் இன்று பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த வழியே சென்ற இளம்பெண் பரிதாபமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து தமிழ்நாடு முழுவதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜே.சி.பி. உரிமையாளர் ஞானசேகர் மற்றும் ஓட்டுனர் பாலாஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையின் பரபரப்பான மற்றும் முக்கியமான சாலைகளில் ஒன்று அண்ணாசாலை ஆகும். அண்ணாசாலையில் உள்ள ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சற்று முன்பு சுரங்கப்பாதை அருகே பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இன்று காலை திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, அந்த இடிபாடுகள் சாலை வரை சரிந்து விழுந்தது. அப்போது, அந்த கடிடத்தின் முன்பு நடைபாதையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர். மேலும், தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இளம்பெண் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரியா என்றும் அவர் தேனியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. பிரியா தேனியைச் சேர்ந்தவர் ஆவார். பம்மலில் உள்ள தனது சித்தி வீட்டில் இருந்து ஆயிரம்விளக்கில் உள்ள அலுவலகத்திற்கு தினமும் பணிக்கு வந்து சென்றுள்ளார்.
பணிக்கு சென்ற மகள் சடலமாக திரும்பியதை அறிந்து அவரது குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் மிகுந்த சோகம் அடைந்தனர். கட்டிடத்தின் இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் செயல்பட்டதன் காரணமாகவே இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர் ஞானசேகர், ஜே.சி.பி. ஓட்டுனர் பாலாஜி மற்றும் மேற்பார்வையாளர் பிரபு ஆகியோரிடம் போலீசார் காலை முதல் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜே.சி.பி. உரிமையாளர் ஞானசேகர் மற்றும் ஓட்டுனர் பாலாஜி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: காதலியுடன் முற்றிய சண்டை.. ஆத்திரத்தில் 70 லட்ச ரூபாய் பென்ஸ் காரை எரித்த இளம் மருத்துவர்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..