சென்னைவாசிகளே உஷார்... வேலை செய்த வீட்டில் சம்பவம் செய்த நேபாள தம்பதி
வேலை செய்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதி கைது. 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்பு

வீட்டு பணிக்கு சேர்ந்த தம்பதிகள்
சென்னை நீலாங்கரை IB நகர் மூன்றாவது தெருவில் மகேஷ் குமார் ( வயது 60 ) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் பாதுகாப்பிற்காக நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் மானசாகி மற்றும் அவரது மனைவி பினிதா சாகி ஆகியோர்கள் வேலைக்குச் சேர்ந்து வீட்டின் பாதுகாப்பு மற்றும் வீட்டின் இதர வேலைகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மகேஷ்குமார் கடந்த 14.05.2025 அன்று காலை 8 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்ற ஊருக்கு சென்று குல தெய்வ வழிபாடு முடித்து இரவு 9.00 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 60 சவரன் தங்க நகைகள் , வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூபாய் 50,000 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
காவல் நிலையத்தில் புகார்
இதுகுறித்து , மகேஷ்குமார் நீலாங்கரை குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டதின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் சட்டம் - ஒழுங்கு தெற்கு மற்றும் இனை ஆணையாளர் தெற்கு ஆகியோரின் மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நீலாங்கரை உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலும் , CCTV கேமரா பதிவுகளின் அடிப்படையிலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது மேற்படி வீட்டில் வேலை செய்து வந்த ரமேஷ் மானசாகி , அவரது மனைவி பினிதா சாகி மற்றும் இருவர் என தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் லக்னோ , பெங்களூர், பழியாகலான் மற்றும் நேபாளம் எல்லையான கோறி பண்டா, ககோரோலா ஆகிய இடங்களுக்கு விரைந்து சென்று விசாரித்து பின்னர் சொத்துக்களை மீட்க தக்க புலன் வைத்ததில் இன்று (2005-2025) காலை 08.00 மணியளவில் அண்ணா நகர் சாந்தி சந்திப்பில் சென்ட்ரல் ரயில்வே நிலையம் செல்வதற்காக எந்த ரமேஷ் மானசாகி, ( வயது 22 ) , அவரது மனைவி பினிதா சாகி, ( வயது 21 ) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பெரிய பங்களாவில் வேலை தேடும் தம்பதி
மேலும் விசாரணையில் , மேற்படி தம்பதி நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் , தங்களுடன் நேபாளத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வசித்து பெரிய பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து வீட்டில் யாரும் இல்லாத போது திருடுவதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் , தங்களும் பெங்களூரில் ஆதார் அட்டை வாங்கி வசித்து வந்ததாகவும் திருடியவுடன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தங்கள் நாட்டிற்கு சென்று இருத்து செலவு செய்து விட்டு பின்னர் இந்தியா வந்து எங்கேயாவது தங்கி வேலையை பார்ப்பது போல் நடித்து அந்த வீடுகளில் திருடுவதாகவும் தெரிவித்தனர்.
இரயில் மூலம் தப்பி செல்ல முயற்சி
வீட்டில் வேலை செய்த போது சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றதை பயன்படுத்தி அவர்கள் வீட்டின் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டின் பூட்டை உடைத்து திருடி உடனடியாக நேபாள் சென்றால் போலீசார் எல்லையில் வந்து பிடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அண்ணா நகரில் தங்கள் நாட்டினர் வசிக்கும் பகுதிகளில் ஐந்து நாட்கள் தங்கி விட்டு இன்று (20.05.2025) புறப்பட்டு ரயில் மூலமாக நேபாள நாட்டிற்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 66 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேற்படி குற்றம் செய்த நபர்களுக்கு உறுதுணையாக இருக்க நேபாள நாட்டைச் சேர்ந்த மேலும் இருவரை பிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பது பற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளை சம்பவம் நடந்த ஐந்து தினங்களுக்குக் குற்றவாளிகளை கைது செய்து களவு போன சொத்துக்களை மீட்ட காவல் துறையினரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் காவல்துறைக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு தகுந்த புலன்களுடன் துப்புத் துலக்கி களவு போன சொத்துக்களை மீட்ட நீலாங்க சரக உதவி ஆணையாளர். ஆய்வாளர் , உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அடங்கிய தனிப்படையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.





















