ஸ்ரீபெரும்புதூர் அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - தனியார் நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு
குளத்தில் இருந்த நீரில் அதிகளவில் குளோரைடு என்னும் திரவத்தை அதிக அளவில் கலந்த காரணத்தினால் மட்டுமே சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (39). இவரது மனைவி தாரிகா (35), இவர்களுக்கு சஸ்வின் வைபவ்(6), சித்விக் வைபவ் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாரிகா, சஸ்வின் வைபவிற்கு நீச்சல் பழகுவதற்கு அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு இரண்டு மகன்களையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சஸ்வின் வைபவ் நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் சஸ்வின் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நீச்சல் குளத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் குளத்தில் இருந்த நீரில் அதிகளவில் குளோரைடு என்னும் திரவத்தை அதிக அளவில் கலந்த காரணத்தினால் மட்டுமே சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று நிகழ்வு இடத்திற்கு சென்ற குன்றத்தூர் தாசில்தார் நாராயணன், மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு தனியார் நீச்சல் குளத்தின் மின்சாரத்தை துண்டித்ததோடு, உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நீச்சல் குளம் உரிமையாளர்களான பிரபு நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து மணிமங்கலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்