”காயப்பட்ட பெண் சிங்கத்தை பார்த்து பயப்படணும்” : உயிரிழந்த பாஜக தலைவர் ஸ்வேதா சிங்கின் கடைசி பதிவு எழுப்பும் கேள்வி..
பாஜக தலைவர் ஸ்வேதா சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
பாஜக தலைவர் ஸ்வேதா சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவரது கணவர் தீபக் சிங் கவுரும் பாஜக தொண்டர்தான். ஆனால் அவர் ஒரு சாராய வியாபாரி எனத் தெரிகிறது. ஸ்வேதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கணவர் தீபக் சிங் தலைமறைவாகியுள்ளார்.
35 வயதே ஆன ஸ்வேதா சிங் கவுர், அண்மையில் தான் சந்த்வாரா பகுதியில் இருந்து பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது சடலம் கைப்பற்ற இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சடார் கோட்வாலி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ஸ்வேதா சிங் கவுரின் கணவர் தீபக் சிங் கவுரையும் தேடி வருகின்றனர்.
ஒருவேளை ஸ்வேதா சிங்கை அவரது கணவர் தீபக் சிங் கொலை செய்துவிட்டு தற்கொலை போல் அச்சம்பத்தை மாற்றிவிட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். காயம்பட்ட சிங்கத்தையும், அவமதிக்கப்பட்ட பெண்ணையும் பார்த்து எல்லோரும் பயப்பட வேண்டும் என்று அவர் போட்ட ஃபேஸ்புக் போஸ்ட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இப்போது விசாரணை தீவிரம் எடுத்துள்ளது. ஸ்வேதா சிங்கின் கணவரும் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது
சம்பவ இடத்தை பாண்டா மாவட்ட எஸ்.பி அபினந்தன் சிங் நேரில் ஆய்வு செய்தார். தீபக் சிங்கைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல:
தற்கொலை எந்தப் பிரச்சினையும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கலாம்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
தற்கொலை செய்து கொள்பவர்களின் மன அழுத்தம் மற்றவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்களே அவர்களை அறியாமல் அதை மற்றவர்களுக்கு உணர்த்திவிடுவார்கள் எனக் கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.
தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள் திடீரென மிகவும் அழகாக ஆடை, அணிகலன்கள் அணிவார்களாம். சிலர் மிக மோசமாக தங்களை அலங்கோலமாக்கி திரிவார்களாம். வழக்கத்துக்கு மாறாக ஒரு நபர் ஓவர் ஹைப்பாக இருந்தாலும், மிகவும் டவுனாக இருந்தாலும் அவர்களை கண்காணிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
தற்கொலை என்பது ஒரு விநாடி முடிவு என்றாலும் கூட அதற்காக பல மாதங்கள் கூட திட்டமிட்டிருக்கலாம். இல்லை தொடர்ச்சியாக அந்த முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கலாம். அதனால் நம் உறவுகளோ, நட்புகளோ கடின காலத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அரவணைக்க வேண்டும். உயிர்பிரிந்த பின்னர் சமூக வலைதளங்களில் இரங்கல் குறிப்புகளை எழுதுவதைக் காட்டிலும் இருக்கும்போது அவர்களுக்கு ஆறுதலாக இயன்றவரை உறுதியாக இருக்கலாம்.