ஆட்டோவில் ஒலித்த பக்தி பாடல்.. பட்டப்பகலில் திகில்.. கீழே குதித்து உயிர்தப்பிய பெண்..
டெல்லி குருகிராமில் ஆட்டோவில் ஏறிய பெண்ணைக் கடத்த நடந்த முயற்சி திகில் அடைய வைக்கும் சம்பவமாக உள்ளது.
டெல்லி குருகிராமில் ஆட்டோவில் ஏறிய பெண்ணைக் கடத்த நடந்த முயற்சி திகில் அடைய வைக்கும் சம்பவமாக உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செக்டார் 22 ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவருர் பகல் 12.30 மணியளவில் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். சந்தையில் இருந்து ஏறிய அந்தப் பெண் அருகில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் சரி என்று கூறியுள்ளார். ஆட்டோவில் ஏதோ பக்திப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பெண்ணும் நம்பிக்கை ஏற்பட்டு ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவில் பயணித்தால் 7 நிமிடங்களில் அந்தப் பெண் தனது வீட்டை அடையலாம். மார்க்கெட்டில் இருந்து செல்லும் வழியில் டி பாயின்ட் வந்தவுடன் ஆட்டோ வலது பக்கம் திரும்ப வேண்டும். ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் இடது பக்கம் திரும்பினார். உடனே பதற்றமடைந்த பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், அவரோ கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. அந்த நபரிடம் தப்பிக்க குதிப்பது மட்டுமே ஒரே வழி என நினைத்த அந்தப் பெண் ஆட்டோவில் இருந்து குதித்தார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தனக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரு வழியாக ஆட்டோவில் இருந்து குதித்த அந்தப் பெண், ரிக்ஷா ஒன்றில் ஏறி தனது வீட்டிற்குச் சென்றார். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஊக்கமளித்ததால் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அப்பெண் டெல்லி பாலம் விஹார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர். அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை பதற்றத்தில் குறித்துவைக்க மறந்துவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் குற்றவாளி என்பதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் மரண தண்டனைக்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னர், 'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) மரண தண்டனையை சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அதுவும் குறிப்பாக டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி வாகனங்களில் இளம் பெண் கடத்தி பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் நடந்து வருகிறது.