மயிலாடுதுறை: 8-ம் வகுப்பு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா? காவல்துறையினர் தீவிர விசாரணை!
மயிலாடுதுறை அருகே 8-ம் வகுப்பு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட புரசங்காடு கிராமத்தில் நேற்று மாலை காணாமல் போன எட்டாம் வகுப்பு மாணவன், ராஜன் வாய்க்கால் கரையோரம் முட்புதரில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் மணல்மேடு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவன் காணவில்லை என புகார்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள விலாசம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். எட்டாம் வகுப்பு மாணவன். சிறுவயதிலேயே தாயை இழந்த அருள்செல்வன், புரசங்காடு கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா கேசவ பெருமாள் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
வழக்கம்போல் வீட்டில் இருந்த மாணவன் அருள்செல்வன் காணமால் போய் உள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் அருள்செல்வன் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணல்மேடு காவல் நிலையத்தில் அருள்செல்வனை காணவில்லை என புகார் அளித்தனர். அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், சிறுவன் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சிய உறவினர்கள் மற்றும் காவல்துறையினர், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ராஜன் வாய்க்கால் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம்
இந்நிலையில், இன்று காலை ராஜன் வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு முட்காட்டில் சிறுவன் அருள்செல்வன் சந்தேகத்திற்கு இடமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மணல்மேடு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மணல்மேடு காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலையா? தற்கொலையா? - தீவிர விசாரணை
சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துள்ள மாணவன் அருள்செல்வனின் மரணம் குறித்து மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் சடலம் மீட்கப்பட்ட இடம், சம்பவம் நிகழ்ந்த விதம் ஆகியவற்றைக் கொண்டு, இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும், அல்லது மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், சிறுவன் கடைசியாக யாருடன் பேசினான், அவன் மாயமானதற்கு முன்பு இருந்த மனநிலை என்ன, குடும்பச் சூழ்நிலை அல்லது பள்ளிக்கூடத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தனவா? என்ற விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் அச்சம்
சிறுவனின் சந்தேக மரணம் குறித்துப் பேசிய புரசங்காடு கிராம மக்கள், "அருள்செல்வன் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிறுவன். இப்படி ஒரு விபரீத முடிவை அவன் எடுத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவன் மரணத்தில் மர்மம் நிறைந்திருக்கிறது. காவல்துறையினர் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.
மாணவன் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும், காவல்துறையின் தொடர் விசாரணையும் மட்டுமே இந்த மர்ம முடிச்சினை அவிழ்க்க உதவும். பள்ளி மாணவனின் இந்த எதிர்பாராத மரணம் மயிலாடுதுறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், பொதுமக்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





















