TVK: விஜய்க்கே தெரியாமல் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை.. யாருடன் யார் நடத்தியது?
தவெக தலைவர் விஜய்க்கே தெரியாமல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதால் விஜய் கோபம் அடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கடந்தாண்டு அரசியல் கட்சி தொடங்கி நடப்பாண்டு முதல் தீவிரமாக களப்பணியாற்றத் தொடங்கிய விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அரவமற்ற நிலையில் உள்ளார்.
விஜய்க்கே தெரியாமல் கூட்டணி பேச்சுவார்த்தை:
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விஜய்யின் செயல்பாடுகள் மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், கூட்டணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் தவெக தலைவர் விஜய். விஜய்யை கூட்டணிக்கு கொண்டு அதிமுக -பாஜக கூட்டணி காய் நகர்த்தி வரும் நிலையில், விஜய்க்கே தெரியாமல் தவெகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

தவெக-வின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ். இவர் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் தவெக - அமமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார். விஜய்யின் ஒப்புதல் இல்லாமல் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
வார்னிங் கொடுத்த விஜய்:
இதையடுத்து, மற்ற தவெக மேல்மட்ட நிர்வாகிகள் இந்த தகவலை விஜய்யிடம் காெண்டு சென்றுள்ளனர். இதனால், கடுப்பாகிய தவெக தலைவர் விஜய் அருண்ராஜை அழைத்து கண்டித்துள்ளார். கூட்டணி குறித்து தனிநபர் முடிவு எடுக்கக்கூடாது என்றும், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்தாலோசித்தே முடிவு எடுக்க வேண்டும் என்று அருண்ராஜிற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தவெக-வில் ஏற்கனவே விஜய்க்கு அடுத்தபடியாக சரியான இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோரிடையே நல்ல புரிதல் இல்லை என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
யாருடன்தான் கூட்டணி?
கரூர் சம்பவத்திற்கு பிறகு அடுத்தகட்ட நகர்வை எப்படி மேற்கொள்வது என்று தெரியாமல் தடுமாறி வரும் விஜய்க்கு, தனக்கு தெரியாமலே கட்சி நிர்வாகி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதேசமயம், அதிமுக-வுடன் கரம் கோர்க்க விஜய் தயாராக இருந்தாலும், பாஜக தனது கொள்கை எதிரி என்பதால் அவர்கள் கூட்டணி வகிக்கும் அதிமுக-வுடன் கரம் கோர்க்க அவர் தயாராக இல்லை.
இதனால், விஜய்யின் தவெக - அமமுக - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓரணியில் திகழ்வதற்கான முயற்சிகளையும் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் வேட்பாளர்:
தவெக தரப்பினர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருந்னர். ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு அந்த நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளலாமா? அல்லது அதே நிலைப்பாட்டில் நீடிக்கலாமா? என்பதில் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை விஜய் சந்தித்துள்ள நிலையில், மீண்டும் தனது அரசியல் காய்களை தீவிரப்படுத்துவதற்கான பணியையும் விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், தனக்குத் தெரியாமல் எந்தவொரு நிர்வாகியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதில் கண்டிப்பான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.





















