Sovereign Gold Bond | இன்னும் 5 நாட்களுக்கு நல்ல விலையில் தங்கம்..இன்று முதல் கிடைக்கும் தங்கப்பத்திரம் பற்றி எல்லா தகவலும் இங்கே..!
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சவரன் தங்கப் பத்திரம் இன்று முதல் 5 நாட்களுக்கு வாங்கக் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சவரன் தங்கப் பத்திரம் இன்று முதல் 5 நாட்களுக்கு வாங்கக் கிடைக்கும். 2021-ஆம் ஆண்டுக்கான பத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,807 என்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரபூர் அறிவிப்பில், "IBJA எனப்படும் இந்தியன் புல்லியன் அண்ட் ஜூவலர்ஸ் அசோஷியேசன் நிர்ணயித்துள்ள விலையின்படி ஒரு கிராம் முகமதிப்புடைய தங்கப் பத்திரத்தின் விலை ரூ.4807 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன?
கடந்த 2015ம் ஆண்டு இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுவும் அரசாங்கத்தின் மற்ற பத்திரங்கள் போலத்தான். ஆனால், சவரன் தங்கப் பத்திரத்துக்கான மதிப்பு பணத்தால் நிர்ணயிக்கப்படாமல் ஒரு கிராம் தங்கத்தின் விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
சவரன் தங்கப் பத்திரத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
இந்தியக் குடிமக்கள் அனைவருமே இதனை வாங்கலாம். அதைத்தவிர ட்ரஸ்ட்டுகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்களும் இதில் முதலீடு செய்யலாம். ஒரு முதலீட்டாளர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கட்டித் தங்கத்தை வாங்கும்பொழுது சில கட்டணங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அவர் சவரன் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால் இந்தக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. அதனாலேயே இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சவரன் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை எவ்வளவு?
சவரன் தங்கப் பத்திரத்தில் குறைந்த பட்சமாக ஒரு கிராம் தங்கம் வாங்கி முதலீடு செய்யலாம். அதாவது இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிக்கையின்படி ஒரு கிராம் தங்கத்தை ரூ.4,807க்கு வாங்கிக் கொள்ளலாம். ஒரு தனிநபர் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். ட்ரஸ்ட், தொண்டு நிறுவனங்கள் 20 கிலோ வரை முதலீடு செய்யலாம்.
சவரன் தங்கப் பத்திரங்களின் கால அளவு என்ன?
சவரன் தங்கப் பத்திரத்தில் முதலீடு 8 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். இருப்பினும் 5 ஆண்டுகளுக்குப் பின் முதலீட்டாளர்கள் தேவைப்பட்டால் பத்திரத்தை முறித்து பலனை அடையலாம்.
சவரன் தங்கப் பத்திரங்களைப் பெறுவது எப்படி?
சவரன் தங்கப் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வர்த்தக வங்கிகளில் இருந்து பெறலாம். ஸ்கில் எனப்படும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திலும் வாங்கிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள தபால் நிலையங்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.
டிஸ்கவுன்ட் சலுகையுடன் தங்கப் பத்திரம் வாங்குவது எப்படி?
ஆன்லைன் மூலமும் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். ஆன்லைனில் பத்திரங்களை வாங்குவோரை ஊக்குவிக்க ஆர்பிஐ ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.50 சலுகை அளிக்கிறது.
தங்கபத்திரங்களை வாங்குவதை நல்ல முதலீடாக பரிந்துரைக்கிறார்கள் முதலீட்டு நிபுணர்கள்