Petrol, Diesel | சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை : இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 12 காசுகள் குறைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் பெட்ரோல் நேற்று ரூபாய் 99.08க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூபாய் 93.38க்கு விற்கப்பட்டது. சுமார் ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி சென்னையில் விற்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான மாநில வரியை ரூபாய் 3 குறைத்ததன் காரணமாக பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் ரூபாய் 100க்கும் கீழ் வந்தது. இதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு முதல் ரூபாய் 99.08 என்ற விலையில் பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை12 காசுகள் குறைந்து ரூபாய் 98.96க்கு விற்கப்படுகிறது. மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்திருந்தாலும், டீசல் மீதான வரியை குறைக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் டீசல் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரூபாய் 93.38க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுமார் 30 நாட்களுக்கு பிறகு இன்று டீசல் விலை ரூபாய் 12 காசுகள் குறைந்து ரூபாய் 93.26க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.