GST Reform Savings: மசால் பெட்டி, சமையலைறையில் ரூ.7,000 வரை சேமிக்கலாம் - கார், எலெக்ட்ரானிக்ஸ் நிலவரம் என்ன?
GST Reform Savings: அமலுக்கு வந்துள்ள புதிய ஜிஎஸ்டி திருத்தத்தின் மூலம் சமையலறை செலவில் நடுத்தர மக்கள் மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

GST Reform Savings: அமலுக்கு வந்துள்ள புதிய ஜிஎஸ்டி திருத்தத்தின் மூலம் கார் மற்று மின்சாதனங்கள் மீதான செலவில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிதிருத்தம் அமல்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மக்கள் மீதிருந்த வரிச்சுமைகளை குறைக்கும் விதமாக ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை இன்று முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், நேற்று வரை பின்பற்றப்பட்டு வந்த 4 அடுக்கு வரி விகிதங்களானது, இன்று முதல் இனி 5 மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்களிடையே கூடுதலாக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதோடு, சேமிக்கும் திறனும் கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குறைந்த அத்தியாவசிய பொருட்களின் விலை:
ஜிஎஸ்டி சீர் திருத்தத்தின் மூலம் பல தினசரி பயன்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. உதாரணமாக பராத்தா, பன்னீர், யுஎச்டி பால், பிஸ்கட், சாஸ், உலர் பழங்கள், ஷாம்பு, சோப்பு ஹேர் ஆயில் டூத்பேஸ்ட் உள்ளிட்டவற்றின் மீதான வரி 5 சதவிகிதம் ஆக குறைகக்ப்பட்டுள்ளது. இதுபோக ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள், பெரிய தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் 18 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 350 சிசி வரையிலான சிறிய வாகனங்கள், ஆட்டோ பாகங்கள் மற்றும் சிமென்ட் ஆகியவற்றின் மீதான வரியும் 18 சதவிகிதமாக மாறியுள்ளது. உச்சபட்சமாக மருத்துவ காப்பீடு மீதான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
மசால் பெட்டி, சமையலறை சேமிப்பு:
கிராண்ட் தோர்ன்டனின் அறிக்கை, ஜிஎஸ்டி திருத்தத்தால் நிலையான உணவுப் பொருட்கள், ஃப்ரோசன் உணவுகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுமார் ரூ.10,000 செலவிடும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு மாதாந்திர மளிகைக் கட்டணத்தில் ரூ.400 - ரூ.600 குறைப்பை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது. அதாவது ஆண்டிற்கு சுமார் 7 ஆயிரத்து 200 ரூபாய் சமையலறை செலவுகளில் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோக ரொட்டி, பன்னீர், அடிப்படை மளிகை பொருட்கள் பலவற்றிற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டு சேமிப்பு சுமார் ரூ.10 ஆயிரத்தை கூட எட்ட வாய்ப்புள்ளது.
மின் சாதனங்கள், வாகனங்கள் மீதான சேமிப்பு:
ஏசி, ஃப்ரிட்ஜ் மற்றும் பெரிய டிவிக்கள் மீதான ஜிஎஸ்டி வரியானது 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களது செலவானது 7 முதல் 8 சதவிகிதம் வரை குறைகிறது. உதாரணமாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏசியை வாங்கினால், அதில் இனி நீங்கள் ரூ.2,400-ஐ சேமிக்கலாம். இதே பாணியில் ஒட்டுமொத்த மின்சாதனங்கள் மீது ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை இனி சேமிக்க முடியும்.
நடுத்தர மக்கள் மத்தியில் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எண்ட்ரி லெவல் வாகனங்களின் மீதான வரி 18 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டு, செஸ் வரி முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், புதியதாக கார் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் சுமார் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.1.07 லட்சம் வரை சேமிக்க முடியும். இதுபோக மருத்துவ காப்பீடு மீது விதிக்கப்பட்ட வரி முற்றிலும் நீக்கப்பட்டதால், அந்த வகையில் குறைந்தபட்சம் ஆண்டிற்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இதனால் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால், வாங்கும் திறன் மேம்பட்டு, அரசின் வருவாயும் மீண்டும் அதிகரிக்கும். இதுபோக, எதிர்காலத்திற்கான சேமிப்புகளும் உயர்வதால், இக்கட்டான பொருளாதார சூழலையும் சுயமாக கையாளும் நிதிநிலையை மக்கள் எட்டக்கூடும் என நிதிசார் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





















