ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
ITR Filing: வருமான வரி கணக்கை யாரெல்லாம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ITR Filing: வருமான வரி கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டியவரின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல்:
கடந்த 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஜுலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்த தகுதியானவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது விதி. அதன்படி, தாமதத்தின் காலத்தைப் பொறுத்து ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஐடிஆர் தாக்கல் செய்வதை எவ்வளவு தாமதப்படுத்துகிறீர்களோ, அதற்கு ஏற்ப வரியை குறைப்பதற்கான சில சில விலக்குகளையும் இழக்க நேரிடும்.
அதிகபட்சமாக வருமான வரித் துறையின் கூடுதல் ஆய்வுக்கும் நீங்கள் உட்படுத்தப்படலாம். இதுபோன்ற சங்கடமான சூழல்களை தவிர்க்க, யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
யாரெல்லாம் கட்டாயம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்?
- வருமான விலக்குகளை பெறுவதற்கு முன் உங்களின் வருமானம் / சம்பளம் அனைத்தும் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், உங்களது வருமான வரி விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
- நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்தாலும், நாட்டிற்கு வெளியே ஏதேனும் சொத்துக்களை உங்கள் பெயரில் நன்மை பயக்கும் வகையில் வைத்திருந்தால் அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்தவொரு சொத்தின் மீதும் பங்கு இருந்தாலும் நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
- இந்தியாவிற்கு வெளியே பராமரிக்கப்படும் , அசையா அல்லது அசையும் சொத்துகளுக்கு நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவராக இருந்தாலும் கூட உங்கள் ITR ஐ பதிவு செய்ய வேண்டும் .
- நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகள், பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் அல்லது பணியாளர் பங்கு விருப்பங்கள் (ESOPS) இருந்தால், உங்கள் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
- உங்கள் பெயரில் மின் இணைப்பு இல்லாவிட்டாலும், கடந்த ஆண்டில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தைச் செலுத்தியிருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
- நீங்கள் வெளிநாட்டுப் பயணத்திற்காக 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால், உங்களுக்காக மட்டுமின்றி வேறு யாருடைய பயணத்திற்காக செலவு செய்திருந்தாலும் ஐடிஆர் பதிவு செய்ய வேண்டும்.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் உங்கள் பெயரில் உள்ள வங்கி டெபாசிட்கள் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்
- உங்கள் வணிகத்தின் அனைத்து விற்பனையின் மதிப்பு ரூ.60 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், உங்கள் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.