மியான்மர் ராணுவ ஆட்சியும் இந்தியாவின் உளுந்து விலையும் – ஒரு கெயாஸ் தியரி கதை!
2020 நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்றும் அதனால்தான் ராணுவ ஆட்சி அறிவிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. சுமார் ஒருவருடத்துக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் என்றும் அதுவரை அதிகாரம் ராணுவத்தின் கையில் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
மியான்மர் தேசத்தையும் அங்கு நடப்பில் இருக்கும் ராணுவ ஆட்சியையும் ஒப்பிடலாம் கொரோனா அலையுடன் ஒப்பிடலாம். மீண்டும் மீண்டுமாகக் கொரோனா வைரஸ் தாக்குதல் நிகழ்வது போல மீண்டும் மீண்டுமாக அங்கே ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து கொண்டிருக்கிறது. வருடம் 1958ல் தான் முதன்முதலில் அங்கே ராணுவ ஆட்சி மறைமுகமாக அமலுக்கு வந்தது.
1962ல் நே வின் தலைமையிலான ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது அதன் பிறகு பர்மா சோஷலிச திட்டக் கட்சி என்கிற பெயரில் நே வின் தலைமையிலான அரசு 26 ஆண்டுகள் அங்கே ஆட்சி செய்தது. மியான்மரின் தலைவரான ஆங் சாங் சூ கி வீட்டுச் சிறை வைக்கப்பட்டது முதல் ரோஹிங்கியா இனத்தின் மீதான ராணுவத் தாக்குதல் வரை நடைபெற்றது இந்தக் காலத்தில்தான்.
பிறகு 2010ல் அந்த நாட்டில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து 2011 ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூ கி தேசிய ஆலோசகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியில் மியான்மரின் தேசிய ராணுவமான தத்மதாவ் அங்கே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
சூகி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டது. ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார். 2020 நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்றும் அதனால்தான் ராணுவ ஆட்சி அறிவிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. சுமார் ஒருவருடத்துக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் என்றும் அதுவரை அதிகாரம் ராணுவத்தின் கையில் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. 76 வயதாகும் ஆங் சாங் சூ கியும் மற்றும் அந்த நாட்டு ஜனாதிபதி வின் மையிண்ட்டும் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மியான்மர் ராணுவ ஆட்சிக்கும் இந்திய உளுந்து விலையேற்றத்துக்கும் என்ன தொடர்பு?
மியான்மர் உளுந்து ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சர்வதேசக் கருப்பு உளுந்து ஏற்றுமதியில் சுமார் 58 சதவிகிதம் வரை மியான்மர் ஏற்றுமதி செய்கிறது. இதில் 84 சதவிகிதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. சென்னை துறைமுகம் வழியாக மட்டும் இந்தியாவுக்கான 78 சதவிகித கருப்பு உளுந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அங்கே ராணுவ ஆட்சி அமலுக்கு வந்திருப்பதால் பிற நாடுகளுக்கான உளுந்து ஏற்றுமதி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் ஏற்றுமதி பெரும்பாலும் தொடங்கும், ஆனால் ராணுவ ஆட்சியின் காரணமாகவும் கடந்த வருடத்தில் அதிக மழை பெய்ததன் காரணமாகவும் இந்தியா மற்றும் மியான்மர் என இருநாடுகளுக்குமான கையிருப்பு பயிர்கள் முதல் பண்டமாற்றுக்குத் தேவையான இருப்பு வரை அனைத்திலுமே அதிக அளவிலான பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உளுந்து உற்பத்தியும் 2017-18ம் ஆண்டுகளின் 34 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியுடன் ஒப்பிடும்போதும் 2019-20ம் ஆண்டுகளில் 20 லட்சம் மெட்ரிக் டன் எனக் குறைந்துள்ளது. மற்றொருபக்கம் மியான்மரும் சீனாவிடமிருந்து உளுந்து இறக்குமதி செய்வதால் பச்சைப்பயறு நடவு விதைகளுக்கு மாறியுள்ளது.
விளைவு, மியான்மரிலிருந்து பர்மீஸ் எஸ்.க்யூ. வகை உளுந்துகளைக் கொள்முதல் செய்யும் நகரங்களில் உளுந்து விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. மும்பையில் கிலோ உளுந்தின் விலை 117 ரூபாயிலிருந்து 130 ரூபாயாக அதிகரித்துள்ளது, தலைநகர் தில்லியில் கிலோ நூறு ரூபாயாக இருந்த உளுந்து விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது.
ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் வரை இந்த நிலைத் தொடரும் எனவும் கூறப்படுகிறது.
வெங்காய விலையேற்றத்துக்குக் கொந்தளித்தவர்கள் சாமானியர்களின் உணவான இட்லி விலையேற்றத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?