Kerala Lottery: லாட்டரி டிக்கெட் விலை உயர்வு: கேரளாவில் தொழிலாளர்கள் போராட்டம்! அதிர்ச்சியில் மக்கள், அரசு என்ன செய்யும்?
ஜிஎஸ்டி வரி விதிப்பு உயர்வு காரணமாக லாட்டரி டிக்கெட் விலை உயர உள்ளதால், கேரளாவில் தொழிலாளர்கள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.

லாட்டரி குலுக்கல்களில் பாதிப்பு
சமீபத்தில் நடைபெற்ற போராட்ட அறிவிப்பு மாநாட்டில் கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால், மாநில அரசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்று தெரிவித்தார். பெரிய அளவிலான போராட்டம் டிக்கெட் கிடைப்பதைக் குறைத்து, லாட்டரி குலுக்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். வருமானம் இல்லாமல், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
கேரள மாநிலத்துக்கு லாட்டரி தொழில் சிறந்த வருவாயை அளிக்கிறது. லாட்டரி துறையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினையும், மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும். வரி விகிதம் இப்போது 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருவோணம் பம்பர் லாட்டரி விற்பனையின் மத்தியில் இந்த எதிர்பாராத அதிகரிப்பு வருகிறது.
திருவோணம் பம்ப்பர் லாட்டரி குலுக்கல் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருத்தப்பட்ட வரி செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல் பரிசு ரூ. 25 கோடி மற்றும் பல முக்கிய பரிசுகளை உள்ளடக்கிய ஓணம் பம்ப்பர் லாட்டரி, திருத்தப்பட்ட வரிவிதிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படுமா என்பதில் தெளிவு இல்லாததால் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
தாமதமாகவாவது வரி உயர்வு அமலாகுமா?
இந்த கவலைகளைக் குறிப்பிட்டு, தாமதமான அமலாக்கத்திற்கான மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவாதிக்க அனைத்து தரப்பினருடனும் மாநில அரசு புதன்கிழமை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு, செப்டம்பர் 15ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற உள்ளன.
காகித லாட்டரி முறை
நாட்டிலேயே கேரள மாநிலம் காகித லாட்டரி முறையை இயக்கும் ஒரே மாநிலமாகும். வாரந்தோறும் நடைபெறும் தினசரி லாட்டரி குலுக்கல்களுடன், கூடுதலாக, 6 பம்ப்பர் லாட்டரிகளும் நடக்கின்றன. பம்ப்பர் டிக்கெட்டுகள் தவிர்த்து, சராசரியாக தினமும் 1.08 கோடி லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.






















