Tax On Parboiled Rice: புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து புழுங்கல் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில், 20 சதவிகித வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு வரி:
அத்தியாவசியப் பொருட்களுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வெங்காயம் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களுக்கு கூடுதல் ஏற்றுமதி வரி விதித்து உத்தரவிட்டது. அந்த வரிசையில் தற்போது புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்திய மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்த நிலையில், தற்போது 20 சதவிகித வரிவிதிப்பு குறித்து அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு செலுத்தும் வரி அதிகரிக்கும் என்பதால், பிற நாடுகளுக்கான ஏற்றுமதி குறையும் சூழல் உருவாகியுள்ளது. அதோடு, இந்தியாவில் அரிசி விலை ஏற்கனவே 11 வருடங்களில் இல்லாத அளவிலான உச்சத்தில் இருக்கும் வேளையில், இந்த தடை மற்றும் வரி விதிப்பு உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான கட்டுப்பாடுகள் நவம்பர் மாதம் வரையில் தொடரும் என சில மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம் என்ன?
எதிர்பாராத விதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொட்டிய கனமழை மற்றும் இயற்கை பேரிடர்கள் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டிலேயே விளைபொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், சீனாவிலும் மழை வெள்ளம் காரணமாக அந்நாட்டின் அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கு தேவை அதிகரித்து இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு, அதிகப்படியான அர்சி ஏற்றுமதி செய்யப்படலாம் என அரசு கணித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு தான், புழுங்கல் அரிசிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதியில் இந்தியா:
சர்வதேச அளவில் புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானது. 2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மொத்த அரிசி ஏற்றுமதியில் புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி மட்டும் 7.4 மில்லியன் டன்களாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு விதித்துள்ள புதிய வரியால், சர்வதேச சந்தையில் அரிசியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஓட்டுமொத்த தென்கிழக்கு நாடுகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.