GST: 143 பொருட்கள் மீதான வரி உயர்வு? என்ன சொல்கிறது ஜிஎஸ்டி கவுன்சில்?
GST:143 பொருட்கள் மீதான வரி உயர்வு குறித்து எந்த திட்டம் இல்லை என்றும், இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கபடவில்லை என்றும் கவுன்சில் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் மே மாதம் நடக்க இருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதம் உயர்த்தப்படும் என்றும், இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட இருப்பதாகவும் வெளியான தகவலை ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வாகத்தின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அப்பளம், வெல்லம், சாக்லெட், கண்ணாடி பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை ஜி.எஸ்.டி. கவுன்சில் கேட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்த வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை எதிர்ப்பு குரலாக பதிவு செய்து வந்தனர். இந்த வரி உயர்வு சாமானிர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துகளும் எழுந்தது.
ஆனால், இந்த தகவலை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் மறுத்தனர். மேலும், பாதிக்கு மேற்பட்ட பொருட்களை அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரிவிகிதமான 28 சதவீதத்துக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தன. இதுகுறித்து மாநில அரசிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படவில்லை என்றும் உறுதியளித்தன. ஜி.எஸ்.டி வரி விகிதத்தை மாற்றுவது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்னும், இது தொடர்பாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் துணிகள், ஆடைகள், காலணிகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இதனால்,தற்போது ரூ. 1000-க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு மட்டும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், 1000 க்கு குறைவான ஆடைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. எனவே, அனைத்து வகையான ஆடைகளுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை ( மிகவும் விலை குறைவான ஆடைகளுக்கும் கூட) பயனாளர்கள் செலுத்த வேண்டும். மேலும், அனைத்து விலை மதிப்புமிக்க காலணிகள் மீது 12% ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த அதிகபட்ச வரி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், 143 பொருட்கள் மீதான வரி உயர்வு குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், மே மாதம் நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்வு குறித்து அறிப்புகள் இடம்பெறும் என்று கருத்துகளும் நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்