Gold Price: ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் தொடும்; எப்போது? ஏன்? அதிர்ச்சியூட்டும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்
Gold Price Predictions: தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில், இந்த நிலை இன்னும் தொடருமா என்று தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி விளக்கமாகப் பேசினார்.

வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை என்பதால், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் தொடும் என்று எச்சரிக்கிறார் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏறும் தங்க விலை
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே செல்கிறது. 1000, 500 என்று ஏறும் தங்கத்தின் விலை, 200, 100 எனக் குறைகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில், இந்த நிலை இன்னும் தொடருமா என்று தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி விளக்கமாகப் பேசினார்.
வல்லரசு நாடுகளின் வர்த்தகப் போர்
’’அமெரிக்கா, சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளும் நடத்தி வரும் வர்த்தகப் போரில் பிற உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டை ஆபத்தானதாகக் கருதும் முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.
இப்போதைக்குத் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பே இல்லை. சொல்லப் போனால் இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். ஜனவரி 1ஆம் தேதி 1 கிராம் தங்கம் 7,350 ரூபாயா இருந்தது. 1 சவரன் தங்கம் 57,200 ரூபாயாக இருந்தது. இன்று 1 கிராம் 9 ஆயிரத்தைத் தொடுகிறது. 1 சவரன் தங்கம் 71 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 1 சவரனுக்கு 14 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.
எப்போது தங்க விலை குறையும்?
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பரஸ்பர வரி விதிப்பை நீக்கும் பட்சத்தில் மட்டுமே தங்க விலை குறையும். ஆனால் சீனா- அமெரிக்க நாட்டுத் தலைவர்களின் ஈகோ குறையப் போவதில்லை.
அதனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 சவரன் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்க விலைதான் உயரும். குறைய வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறோம்.
தங்க உற்பத்தி என்னவாகும்?
தங்க உற்பத்தில் எவ்வளவுதான் அதிகரித்தாலும் விலை குறையும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் தங்க விலை சர்வதேச சந்தையில் நிர்ணயம் செய்யப்படுகிறது’’.
இவ்வாறு தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்தார்.























