Flipkart Forex Violation: அந்நியச் செலாவணி மோசடி: ஃபிளிப்கார்ட் நிறுவனர் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்!
அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் விதித்ததோடு, அதை சந்திக்கக் கூடாது என்றால் அதற்கான உரிய காரணங்களை விளக்கங்களை நல்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளது.
பிளிப்கார்ட் அக்டோபர் 2007 இல் சச்சின் பன்சால், பின்னி பன்சால் என்னும் இரு இளம் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டது. நிறுவனர்கள் இருவரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் படித்து பின்னர் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். இந்நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.
கடந்த மாதம் ப்ளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சால், பின்னி பன்சால் மற்றும் டைகர் குளோபள் நிறுவனத்துக்கு ஷோ காஸ் என விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களையும் நீண்ட காலமாகவே அமலாக்கத் துறை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம், WS Retail என்ற தனக்கு இணையான நிறுவனத்திடம் இருந்து அந்நிய முதலீட்டைப் பெற்று பின்னர் தனது இணையதளம் வாயிலாக பொருட்களை விற்றுள்ளது என்பதே அதன் மீதான குற்றச்சாட்டு. இந்த மாதிரியான வர்த்தகத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "எங்களின் நிறுவனம் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறது. நாங்கள் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பு நல்குவோம். அவர்கள் 2009 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் உள்ள கணக்குகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை சரியாக 90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதற்குள் அந்த நிறுவனம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.
வழக்கு புதிதல்ல..
பிரபலம் என்றாலே வழக்குகளை சந்தித்து தானே ஆக வேண்டும். அந்த வகையில், பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது அவரது மனைவி பிரியா புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இவர் தனது கணவர் சச்சின் மீது பெங்களூருவில் உள்ள கோரமங்களா காவல்நிலையத்தில் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்று போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.