வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கபடுமா? ட்விட்டரில் கோரிக்கை வைக்கும் மக்கள்
வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் நான்கு நாட்கள் மீதமிருக்கிறது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக பல பயனர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "இதுவரை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பது குறித்த யோசனை பரிசீலனையில் இல்லை. கடந்த முறை, 50 லட்சத்துக்கும் மேலான வருமான வரி கடைசி தேதியில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முறை, கடைசி தேதியன்று, 1 கோடிக்கும் மேல் வருமான வரி தாக்கல் செய்யப்படலாம் அதற்கு தயாராக இருக்கும்படி என்னுடைய துறை அலுவலர்களிடம் கூறியுள்ளேன்" என்றார்.
வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு நிதித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரிப் செலுத்துவர்களின் சங்கமான அனைத்திந்திய வரிப் செலுத்துவர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு சார்பில் இப்படி விளக்கம் அளிக்கப்பட்டது.
காலக்கெடுவை நீட்டிப்பதற்கான கோரிக்கைகளுக்கு மத்தியில், பட்டயக் கணக்காளர்களின் உச்சபட்ச அமைப்பான இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி வரை 2.8 கோடிக்கும் அதிகமான கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது.
"#Extend_Due_Date_Immediately" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வருகிறது. காலக்கெடு முடிவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்துவது கட்டாயமானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்