டெஸ்லா பங்கை விற்றது எதனால்: விற்கும் முன் ட்விட்டரில் வாக்கெடுப்பு வைத்த எலன் மஸ்க்!
டெஸ்லா நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான பங்கில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 35 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறார் உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலன் மஸ்க் தனது 10 சதவீத பங்குகளை விற்க வேண்டுமா என்று தன்னை ட்விட்டரில் பின்தொடரும் 6.3 கோடி பேரிடம் சில நாள்களுக்குமுன் கேட்டு ஒரு ட்விட்டர் போல் (வாக்கெடுப்பு) வைத்திருந்தார். அந்த வாக்கெடுப்பு முடிவில் அவர் பங்குகளை விற்கவேண்டும் என்பதற்கு அதிகமானோர் வாக்களித்ததால், இரண்டு நாட்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16 சதவீதம் சரிந்தன. டெஸ்லா உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் பங்குச் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் 70 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் இந்த டெஸ்லா நிறுவனத்தில் இருந்து எலன் மஸ்க்கின் அறக்கட்டளை சுமார் 36 லட்சம் பங்குகளை விற்றிருக்கிறது. விற்ற பங்கின் மதிப்பு சுமார் 28,000 கோடி இந்திய ரூபாய். அதுமட்டுமின்றி மேற்கொண்டு 9.34 லட்சம் பங்குகளையும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார். அதனை தொடர்ந்து சுமார் 22 லட்சம் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளார் என பங்குச் சந்தையில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் மூலம் தெரியவருகிறது.
Much is made lately of unrealized gains being a means of tax avoidance, so I propose selling 10% of my Tesla stock.
— Elon Musk (@elonmusk) November 6, 2021
Do you support this?
பங்குகளை விற்பது குறித்து ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு பல நாட்களுக்கு முன்பாகவே, ஐந்தில் ஒரு பங்குகை அதாவது சுமார் 20% பங்குகளை செப்டம்பர் மாதத்திலேயே விற்பனை செய்யப்பட்டு விட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன. இருப்பினும், ரெகுலேட்டரி ஃபைலிங்கின் படி, மீதமுள்ள பங்குகளின் விற்பனை குறித்து இன்னும் சந்தையில் திட்டமிடப்படவில்லை என இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த விற்பனையானது டெஸ்லாவில் உள்ள மஸ்க்கின் மொத்தப் பங்குகளில் சுமார் மூன்று சதவீதமாகும். இருப்பினும் விற்பனையானது அவரது ட்விட்டர் வாக்கெடுப்புடன் தொடர்புடையது தானா அல்லது அவர் படிப்படியாக விற்பனை செய்ய விரும்புகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. கடந்த வார இறுதியில் டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவீதத்தை விற்க வேண்டுமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கினார் எலன் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட "பில்லியனர்கள் வரி"க்கு பதில் கூறும் வகையில், ட்விட்டர் வாக்கெடுப்பின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாகவும் தன் ஷேரை விற்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். ஜனநாயகக் கட்சியினரின் மசோதாவால் அவரது பங்குகளின் மதிப்பு மேலும் உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் அவர் மிகப்பெரிய தொகையை வரியாகக் கட்ட வேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டிருந்தது. இந்த மசோதாவின்படி பணக்காரர்கள் தங்களது பங்குகளின் விலை உயரும்போது, அதை அவர்கள் விற்காவிட்டாலும்கூட அதற்காக அவர்கள் வரி கட்ட வேண்டியிருக்கும் என்பது விதி.
Note, I do not take a cash salary or bonus from anywhere. I only have stock, thus the only way for me to pay taxes personally is to sell stock.
— Elon Musk (@elonmusk) November 6, 2021
ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த எலன் மஸ்கின் ட்விட்டர் வாக்கெடுப்பில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 58% சதவீதம் பேர் பங்குகளை விற்பனை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் வாக்கெடுப்பு முடிந்த பிறகு பங்கு விற்பனை குறித்து எலன் மஸ்க் எதுவும் பேசாமல் இருந்தார். ட்விட்டரிலும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. "நான் எங்கிருந்தும் ரொக்கமாகச் சம்பளம் அல்லது போனஸ் பெறவில்லை. என்னிடம் பங்குகள் மட்டுமே உள்ளன. எனவே நான் தனிப்பட்ட முறையில் வரி செலுத்துவதற்கான ஒரே வழி பங்குகளை விற்பதுதான்" என்று முன்னதாக மற்றொரு ட்வீட்டில் ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் பங்குசந்தை ஆவணங்களில் அவர் பங்குகளை விற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை எலன் மஸ்க் விற்பது இதுவே முதல் முறையாகும். அப்போது அவர் வருமான வரியைக் கட்டுவதற்காக சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றார். அதிக விற்பனைக்கு வாய்ப்பிருப்பதாக எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போரை "நிச்சயமாக பயமுறுத்தக்கூடும்" என்றும் டெஸ்லாவின் பங்கு விலையை பாதிக்கலாம் என்றும் தரகு நிறுவனமான சிஎம்சி மார்க்கெட்ஸ் விற்பனை வர்த்தகர் ஓரியானோ லிசா கூறுகிறார், "மஸ்க் தனது பங்குகளை ஓரளவிற்குப் பாதுகாக்கவே விரும்புவார். பங்குகளைத் தேடி மக்கள் அவர் வீட்டுக் கதவைத் தேடி வருவதை விரும்பமாட்டார்" என்று கூறினார். தனது பங்குகளில் சிலவற்றை மஸ்க் விற்றதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்தன. உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 280 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்.