Card Tokenisation: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கான விதிகளில் மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அமல்...
டோக்கனைசேஷன் விதிகள் அமலுக்கு வரவுள்ளதால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துவதற்கான விதிகள், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டோக்கனைசேஷன் விதிகள் அமலுக்கு வரவுள்ளதால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துவதற்கான விதிகள், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய விதிகள் பணம் செலுத்தும் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, ஆன்லைன் மோசடியில் இருந்து அட்டைதாரர்களைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷன் வழிகாட்டுதல்களுக்கான காலக்கெடு ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், அது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கான புதிய விதிகள் என்ன சொல்கிறது?
பொதுவாக, கிரெடிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இணையத்தில் ஏதேனும் வாங்கும்போது, கார்டுகள் தொடர்பான விவரங்களை சேவ் செய்து கொள்ள வேண்டுமா என கேட்கப்படும். அடுத்த முறை, பயன்படுத்துகையில் குறிப்பிட்ட விவரங்களை திரும்பவும் பதிவிட தேவையில்லை.
ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டில், வாடிக்கையாளர்களின் அட்டை விவரங்களை (அட்டை எண்கள், காலாவதி தேதிகள்) சேவ் செய்வதிலிருந்து வணிகத் தளங்களை மத்திய வங்கி கட்டுப்படுத்தியது. பல நிறுவனங்களின் அட்டை விவரங்கள் கிடைப்பது கார்டு தரவு திருடப்படும் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் டோக்கனைசேஷன் என்னும் முறை கட்டாயமாக்கியது.
டோக்கனைசேஷன் என்றால் என்ன?
டோக்கனைசேஷன் என்பது முக்கியமான தரவை டோக்கன்கள் எனப்படும் முக்கியம் அல்லாத தரவாக மாற்றும் செயல்முறையாகும். இந்த டோக்கன்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் 16 இலக்க கணக்கு எண்ணை, திருடப்படவோ அல்லது மீண்டும் பயன்படுத்தவோ முடியாத டிஜிட்டல் எண்களாக மாற்றும்.
உங்கள் கார்டின் தரவு தற்போது இந்த டோக்கன்களாக மாற்றப்பட உள்ளது. கார்டு விவரங்கள், யாரும் கண்டுபிடிக்க முடியாத, சீக்ரெட் கோடுகளாக சேமிக்கப்படும் போது, மோசடி தவிர்க்கப்படும்.
இதுவரை 19.5 கோடி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான பெரிய வணிகர்கள், ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷன் விதிமுறைகளுக்கு ஏற்கனவே இணங்கியுள்ளனர்.
இது வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?
ஒரு வாடிக்கையாளர், எதையாவது ஷாப்பிங் செய்யும்போது அவர்களின் முழு அட்டை விவரங்களையும் அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்கத் தொடங்கியதும், வணிகர் டோக்கனைசேஷனைத் தொடங்கி, கார்டை டோக்கனைஸ் செய்ய ஒப்புதல் கேட்பார். ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கோரிக்கையை வணிகர் கார்டின் நெட்வொர்க்கிற்கு அனுப்புவார்.
கார்டு நெட்வொர்க் ஒரு டோக்கனை உருவாக்கும். இது 16 இலக்க அட்டை எண்ணுக்கு மாற்றாக செயல்பட்டு அதை வணிகருக்குத் திருப்பி அனுப்பும். வணிகர் இந்த டோக்கனை எதிர்கால பரிவர்த்தனைகளுக்காக சேமிப்பார். இப்போது, அவர்கள் அனுமதி வழங்குவதற்கு முன்பு போலவே CVV மற்றும் OTP-ஐ உள்ளிட வேண்டும்.