Cylinder Price: காலையிலேயே நல்ல சேதி.. சிலிண்டர் விலை குறைப்பு, எவ்வளவு தெரியுமா?
Cylinder Price: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 34 ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

Cylinder Price: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 34 ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை குறைப்பு:
சென்னையில் வணிக சிலிண்டர் ஒன்றின் விலை, ஆயிரத்து 823 ரூபாயிலிருந்து 34 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று முதல் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டரின் விலை ஆயிரத்து 789 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதமும் இந்த சிலிண்டரின் விலை 57 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டதால், அதன் விலை ஆயிரத்து 823 ரூபாய் 50 காசுகளாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. அடுத்தடுத்து வணிக சிலிண்டர் விலை குறைந்து வருவது ஓட்டல் உள்ளிட்ட தொழில் செய்து வரும் வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பழைய விலையே தொடர்கிறது. அதாவது எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 868.50 ஆக உள்ளது. கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி, இந்த சிலிண்டர்களின் விலை 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டது. உலக நாடுகளின் மீது அமெரிக்க முன்னெடுத்த சரிநிகர் வரி விதிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச நிலவரம்:
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகியவை, வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகம் செய்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சமையல் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது, இல்லத்தரசிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.





















