Budget 2024: ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படுமா? காத்திருக்கும் சேலம் மக்கள்.
மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை.
மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளடக்கிய கோவை மண்டலம் மத்திய அரசால் ராணுவ தளவாட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், ராணுவ வீரர்கள் அணியும் உடைகள் என ராணுவம் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் இடமாக கோவை மண்டலம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தக்கூடிய உடை மற்றும் பேராஷூட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக சேலம் மாவட்டத்தில் இரும்பாலை அருகில் உள்ள 1507.23 ஏக்கர் காளி இடத்தை மத்திய அரசின் குழு ஆய்வு செய்து. சேலம் மாவட்ட நிர்வாகம் மத்திய அரசின் ராணுவ தளவாட மையம் அமைக்க முழு ஒத்துழைப்பு தரப்படும் என உறுதியளித்திருந்த நிலையில், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. மேலும் ராணுவ தளவாட மையம் சேலத்தில் அமைந்தால் இங்குள்ள இருவதாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் சேலத்தில் ராணுவ தளவாட மையம் அமைக்கப்பட்டால் அதனை சார்ந்து இருக்கக்கூடிய பல்வேறு மூலப்பொருட்களில் நிறுவனங்கள் சேலம் மாவட்டத்திற்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த நிறுவனங்கள் என லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகும். இது மட்டுமின்றி ராணுவ தளவாட மையத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதில் எடுத்துச் செல்வதற்கு விமானங்கள் பயன்படுத்தப்படும். இதன் காரணமாக சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, சரக்கு விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் சேலத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்டவைகளை எளிதில் வெளி மாநிலங்களுக்கும், பெருநகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட மையம், சர்வதேச விமான நிலையம், சிப்கோ, சிப்காட் என 53 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 330 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற திட்டங்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.