இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த மத்திய பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!
இயற்கை விவசாயத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயற்கை விவசாயத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அதற்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்: தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், "109 வகையான 32 பயிர்களை வெளியிடவும், அதற்கு சான்றிதழ் வழங்கி விளம்பரம் செய்து, இயற்கை விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவை உறுதி செய்வதற்காக, சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் சூழல் அமைப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும். தேவை அடிப்படையிலான 10,000 உயிர் வள மையங்களையும் அரசு நிறுவும்.
6 கோடி விவசாயிகள் மற்றும் அவர்களது நிலங்களை டிஜிட்டல் பதிவேட்டில் ஒருங்கிணைத்து, விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, மாநிலங்களுடன் இணைந்து விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கவும் திட்டம் உள்ளது" என்றார்.
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்:
- வேளாண்துறைக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து திட்டம் அமல்படுத்தப்படும்.
- ஊரக வளர்ச்சிக்கு என்று 2.6 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பு.
- புதிய இன்டெர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலமாக ஒரு கோடி இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என அறிவிப்பு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் மூலமாக பயிற்சிகள் வழங்கப்படும் இதன் மூலமாக சுமார் 500 துறைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் இதன் மூலமாக நிலுவையில் உள்ள ஏராளமான கம்பெனிகள் தொடர்பான வழக்குகள் தொடர்பான விவகாரங்கள் தீர்த்து வைக்கப்படும் என அறிவிப்பு.
- பீகாரில் உள்ள புராதானமான கோயில்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு நிதி அறிவிப்பு நாளந்தா பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்கும் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் என்று கூடுதல் நிதி அறிவிப்பு ஒடிசா மாநிலத்திற்கான கோவில்கள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மேம்பாட்டிற்கும் கூடுதல் நிதி அறிவிப்பு.