TN Budget 2022: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்..! வெளியாக இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன?
TN Budget 2022: சென்னை, சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்தாண்டு தி.மு.க. அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டைப் போலவே இந்த பட்ஜெட்டும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெண்களுக்கான மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை, மாதந்தோறும் மின்கட்டணத்தொகை ஆகிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டம் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி இருப்பது போல, மாதம் இருமுறை வெளியாகும் வகையில் கல்வி பத்திரிகையும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றபடாத அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்புகளாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், இன்று பிற்பகல் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
TN Budget 2022 LIVE: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்பு..
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு விவகாரம், அ.தி.மு.க.வினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அ.தி.மு.க.வினர் பேரவையில் குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முதன்முறையாக வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதேபோல, இந்தாண்டும் வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எப்போது தாக்கல் செய்வார்? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்