TN Budget 2022: எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய திமுக அரசு...!
தமிழ்நாடு பட்ஜெட் 2022: எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு ரூபாய் 1,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் 2022 -23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமூக நலத்துறையின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, “ ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு ரூபாய் 1, 949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூபாய் 5 ஆயிரத்து 922 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், “ சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி” அமைக்கப்படும். இந்த மையத்தில், குழந்தைகள் மற்றும் மகளிரின் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சமூகநலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பட்ஜெட்டில் மாநிலத் தொல்லியல் துறை கடந்தாண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உள்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கிறது.
புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும், பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடி கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. இடைச்சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தை கண்டறிவதறண்கு இந்திய கடல்சார் பல்கலைகழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து இந்தாண்டு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏழு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்துகோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப்பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.
இந்தாண்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ளபழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் பூண்டியில் தொல் பழங்கால அகழ்வைப்பகம், தருமபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக்கட்டங்களை தனித்துவம் மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டிடங்களைச் சீரமைப்பதற்கு இந்தாண்டு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்தது.
மேலும் படிக்க : TN Budget 2022 LIVE: பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித் திட்டம்... சென்னை வெள்ளத்திற்கு ரூ.500 கோடி... பட்ஜெட் அறிவிப்புகள் இதோ