Railway Budget 2024: தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படுமா? எதிர்பார்ப்புகளை கிளப்பும் பட்ஜெட்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவக்கப்படுமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் உடன் இணைக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்: சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்தே ரயில்வேதுறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து மத்திய பட்ஜெட் உடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
பட்ஜெட் நடைமுறையை விரைவுப்படுத்தி, மேலும் பயன் உள்ளதாக மாற்றவே மத்திய பட்ஜெட் உடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படுமா? கடந்த 25 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேத்துறையை நவீனப்படுத்துவதில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவீன அதிக வேக ரயில்களை அறிமுகப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023-24 பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் (தற்போது யூனியன் பிரதேசம்) ஆகிய மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு பட்ஜெட்டில் மக்களுக்கு எதுவும் அறிவிக்கப்படாமல் போனதே காரணம் என கூறப்படுகிறது. எனவே, மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு மத்திய பாஜக அரசு, புதிய ரயில் திட்டங்களை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.