(Source: ECI/ABP News/ABP Majha)
Union Budget 2022 | பட்ஜெட் 2022: மொபைல்ஃபோன், தொலைக்காட்சி விலை குறையுமா, நிபுணர்கள் சொல்வது என்ன?
முக்கியமாக எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புகள் என்ன இருக்கும் என்பது குறித்து எப்போதுமே கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும்
இந்திய பட்ஜெட் 2022 என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எந்தெந்த பொருட்களுக்கான வரியில் தளர்வு இருக்கும், எது விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். முக்கியமாக எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புகள் என்ன இருக்கும் என்பது குறித்து எப்போதுமே கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும், இதற்கிடையே உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரானிக் மற்றும் மொபைல் ஃபோன்களின் பாகங்கள் அல்லது உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பல்லவி சிங் கூறுகையில், வரித்தளர்வில் உண்டாகும் ஏற்றத்தாழ்வைக் குறைக்க, மூலப்பொருட்களில் கிடைக்கும் ஜிஎஸ்டியை வரியை கருத்தில் கொண்டு, அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்குமாறு சில்லறை விற்பனைத் துறை அரசை வலியுறுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன் உள்ளிட்டவை தேவையாக உள்ளது. அதன் அடிப்படையில் 2022-23 பட்ஜெட்டில், வரிகளில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் குறைக்க மூலப்பொருட்களில் கிடைக்கும் ஜிஎஸ்டி வரியைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், வலியுறுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 பட்ஜெட்டில் தொலைக்காட்சிகள் விற்பனைக்கான ஜிஎஸ்டி குறைப்பு அவசியம் என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார். “தற்போதைய 32 இன்ச் தொலைக்காட்சிகள் வரை மட்டுமே 18 சதவிகிதம் என்ற வரி விகிதம் இருப்பதால், அதனை பெரிய திரை உடைய தொலைக்காட்சிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும். 32 இன்ச்களைக் கடந்த தொலைகாட்சிகள் பல 28 சதவிகித வரி வரம்பில் இடம்பெறுகின்றன.43 இன்ச் வகை தொலைக்காட்சிகளுக்குக்கு கூட இந்த 18 சதவிகித வரி விகிதத்தைக் கொண்டு வரலாம்” என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு வரித்தளர்வு கொடுக்கப்படுமா? பட்ஜெட்டில் தெரியவரும்.2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 31 ஜனவரி தொடங்கி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு கேள்வி நேரம் இருக்காது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. 31 ஜனவரி அன்று தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் 8வது கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். அடுத்த தினமான 1 பிப்ரவரி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் குறித்த நிதியமைச்சரின் உரை 11 மணிக்குத் தொடங்கி சுமார் 1.5 முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது