1922, மார்ச் -18 : மகாத்மா காந்தி மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கும், அதன் வரலாறும்!
இந்திய நாட்டின் தேசத் தந்தை என்று போற்றப்படுபவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அகிம்சை வழியை முன்னெடுத்து, சுதந்திரப் போராட்டத்தில் இவருடைய பங்கு இன்றியமையாதது. இன்றும் மகாத்மா காந்தியை கொண்டாடி வருகிறோம். ஆனால், மகாத்மா மீது வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது பற்றி தெரியுமா? தேசத் தந்தை என்று அறியப்படுபவர், தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டது பற்றி தெரியுமா? ஆம், காந்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1922 ஆம் ஆண்டு மார்ச் 18, அன்று , பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக துரோகம் மற்றும் ‘ வன்முறையைத் தூண்டுதல்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிகழ்வு ’தி கிரேட் ட்ரையல்' (The ‘Great Trial’) என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில் காந்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், காந்தியின் உடல்நலக்குறைவு மற்றும் சிறைவாசத்தின் போது அவருடைய நன் நடத்தை ஆகியவற்றின் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1924 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ’அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. அனைவரும் சட்டத்திற்கு முன் சமம்.’ என்பதை காந்தியடிகள் தீர்க்கமாக நம்பினார். அப்படி இருக்கையில், ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்வதை காந்தி எப்படி ஏற்று கொண்டார்? சட்டத்திற்கு புறம்பான இந்நிகழ்வை காந்தி முழு மனதுடன் ஒப்புக்கொண்டாரா? அல்லது இது நீதிமன்றத்தின் முன் முடிவா?
காந்தி ஏன் கைது செய்யப்பட்டார்:
பிரிட்டிஷ் அரசு 1919-ல் ரவுலட் சட்டத்தை கொண்டுவந்தது. ஒரு நபர் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகம் ஏற்பட்டால், விசாரணையின்றி அவரைச் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு அளித்தது. 1919 ஏப்ரல் 13-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையும் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை கண்டு நெஞ்சம் வாடிய காந்தியடிகள், 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்.
ஒத்துழையாமை இயக்கம், ஆங்கிலேய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கவும், அந்நியப் பொருட்களை பயன்படுத்தாமல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் இந்தியர்களை காந்தியால் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதன் விளைவாக அரசுப் பணியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர்; பிரிட்டிஷ் அரசு அளித்த கெளரவப் பட்டங்களைப் பலர் திருப்பிக் கொடுத்தன. இந்தப் போராட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனினும், கட்சியின் இளைய தலைமுறையினரும், பெருவாரியான இந்தியர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். காந்தியின் குரல் இந்தியா முழுவதும் ஒலித்தது. இதனால், இந்தியா முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடே ஸ்தம்பித்து போனது. அரசு நிறுவனங்கள் செயலற்றுப் போயின. ஒத்துழையாமை இயக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் ஆங்கிலேய அரசு கடும் அதிருப்தி அடைந்தது.
அதேசமயம், நாடே ஒன்று கூடி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடும் நிலை காந்திக்கு ஏற்பட்டது. அதற்கு முக்கியமாக காரணமாக அமைந்தது, செளரி செளரா சம்பவம். உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கு அருகில் உள்ள சௌரி சௌரா என்ற நகரத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனால் அவர்கள் சிறைவைக்கப்பட்ட காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்கு சூழ்ந்த கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ்காரர்களைத் தாக்க முற்பட்டனர். தங்களைத் தாக்கவருவதைக் கண்ட போலீஸ்காரர்கள் காவல் நிலையத்துக்குள் போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தார்கள். இதில், 23 காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காந்தி இவ்வாறு கூறினார். “கடவுள் என் மீது அளவற்ற கருணை கொண்டிருக்கிறார்., உண்மையான, பணிவான எண்ணங்களுடன் கூடிய மக்கள் பங்கேற்கும் மகத்தான, அகிம்சை வழி போராட்டம் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் நம்பகத்தன்மையும், வன்முறையற்ற சூழலும் இன்னும் உருவாகவில்லை என்று கடவுள் என்னை எச்சரித்திருக்கிறார். இப்போது செளரி செளரா சம்பவத்தின் மூலம், அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்” என்றார். இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார் இந்தச் சம்பவத்துக்கு நான் தான் காரணம் என்று காந்தி முழுப் பொறுப்பு ஏற்று, அதற்கு பிராயச்சித்தமாக ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டதால் ஆங்கிலேய அரசு நிம்மதியடைந்தனர். 1920 டிசம்பரில், இந்தியர்கள் அஹிம்சையின் வழியைப் பின்பற்றினால், ஒரு வருடத்தில் நாட்டிற்க்கு சுயராஜ்ஜியம் கிட்டும் என்று காந்தி மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஓராண்டு கடந்தும் எதுவும் நடக்கவில்லை. காந்தி தோல்வியடைந்தார். காந்தி மக்களிடையே சுதந்திர வேட்கையை பரப்புவதாக கருதிய ஆங்கிலேயே அரசு, இதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தனர். காந்தியை இப்படியே விட்டுவிட்டால், அது நம் அரசாங்கத்திற்குதான் ஆபத்து என்று கருதிய ஆங்கிலேய அதிகாரிகள் காந்தியை கைது செய்ய வேண்டும்; அப்படியானால், எப்போது கைது செய்யப்பட வேண்டும் என்று தீவிரமாக விவாதித்தார்கள். அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு இடைவிடாத சவால்களை முன்வைத்திருந்தார். இதை ‘Satanic’ என்றும் குறிப்பிட்டனர்.
மேலும் யங் இந்தியாவில் (Young India) வெளியிடப்பட்ட கட்டுரைகளில் அவர் எழுத்துக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவே இருந்தது. அதிகாரத்தின் துணையோடு, பலவீனமான மக்களைச் சுரண்டி அதில் மகிழும் எந்த சாம்ராஜ்யமும் இவ்வுலகில் நீண்ட காலம் நீடித்ததாகச் சரித்திரம் இல்லை. நியாயமான கடவுளின் ஆட்சி என்பது இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பது உண்மையென்றால் மூர்க்கமாக ஆட்சி செய்யும் இந்த ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்’ நீண்ட நாள் நீடித்திருக்காது” என்றெல்லாம் அவர் எழுதினார்.
டிசம்பர் 15 அன்று வெளியிடப்பட்ட ‘ஒரு புதிரும் அதன் தீர்வும்’ என்ற கட்டுரையில் காந்தி, ‘சுதந்திரம் என்று அழைக்கப்படுவது அடிமைத்தனம் அல்ல. இந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முழுக்க முழுக்க தீமைகளை விளைவிப்பதாக மட்டுமே இருக்கிறது. அதற்கு நாங்கள் சவால் விடுகிறோம். நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புகிறோம். என்று எழுதினார். இன்னொரு கட்டுரையில், இந்த அரசின் குடிமக்களாக இருப்பதென்பது பாவம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை (பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குச் செய்யும்) தேசத் துரோகமே அதன் லட்சியம். ஒத்துழையாமை இயக்கமென்பது ஆன்மரீதியிலான, அறம்சார் இயக்கம் என்றாலும் அரசைத் தூக்கியெறியும் நோக்கத்தைக் கொண்டது என்பதால், இந்த இயக்கத்தின் செயல்பாடென்பது தேசத் துரோகமே.” என்று எழுதினார். இதுபோன்ற பல நிகழ்வுகள் அவர் மீது தேசத்துரோக வழக்கு பாய்வதற்குக் காரணமானது.
மகாத்மா காந்தி மீதான தேசத்துரோக வழக்கு விசாரணை; நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
`இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124A IPC என்பது பிரிட்டீஷ் நாட்டில் சரியானதாக பார்க்கப்படவில்லை. ஆனால், இந்திய மக்களை அடிமைப்படுத்த ஆங்கிலேய அரசு இதைக் கையில் எடுத்தது. அதாவது, ஒருவர் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறார் என்று தெரிந்தால், அவரை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யும் உரிமை.
அப்ப்டி, 11 மார்ச் 1922 அன்று மதியம், காந்தியும், யங் இந்தியாவின் வெளியீட்டாளரான ஷங்கர்லால் பேங்கரும் (Shankarlal Banker) நீதிபதி முன் நிறுத்தப்பட்டனர்; அவரது தொழிலைப் பட்டியலிடும் போது, காந்தி எழுதினார்: 'நெசவாளர் மற்றும் விவசாயி'. காந்தி உண்மையில் அவரது ஆசிரமத்தில் காய்கறிகளை பயிரிட்டார்; மேலும், அவர் உலகத்தைப் பற்றிய ஆழமான சூழலியல் பார்வையைத் தக்க வைத்துக் கொண்டார் மற்றும் இந்திய நாகரிகத்தின் ஆன்மாவின் பாதுகாவலராக இந்திய விவசாயிகளுக்கு எப்போதும் மதிப்பளித்தார். ஒரு 'நெசவாளர்' என்ற சுய-அறிவுறுதலுடன் குறிப்பிடுகிறார். காந்தி தன் ஆடைகளை ராட்டை கொண்டு நெய்து கொண்டார். இதன் மூலம் ஒரு எளிமையான விவசாயி மற்றும் நெசவாளர், வன்முறை எதிர்ப்பின் தனித்துவமான இயக்கத்தின் முன்னோடி, இப்போது ஒரு பேரரசின் வலிமைக்கு எதிராக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
காந்தியின் நெருங்கிய நண்பர்கள், ஜவஹர்லால் நேரு மற்றும் சரோஜினி நாயுடு மற்றும் பலர் என நீதிமன்ற அறை நிரம்பியிருந்தது. இதைக் சரோஜினி நாயுடு குறிப்பிடுகையில், மகாத்மா காந்தி நீதிமன்ற அறைக்குள் நுழைந்தபோது தன்னிச்சையாக அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்றனர்.
ராபர்ட் புரூம்ஃபீல்ட், ஐசிஎஸ், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, தலைமை தாங்கினார்: அவரது நாட்குறிப்பு அவருக்கு முன் வெளிவரும் உலக வரலாற்று நிகழ்வைப் பற்றி அரிதாகவே குறிப்பிடுகிறது, அதில், பின்வருவனவற்றை மட்டுமே பதிவு செய்கிறது:பம்பாய் பிரசிடென்சிக்கான அட்வகேட்-ஜெனரல் சர் தாமஸ் ஸ்ட்ராங்மேன் வழக்குத் தொடர்ந்தார்; பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், ஒரு நீண்ட விசாரணையின் தேவை தவிர்க்கப்பட்டது மற்றும் புரூம்ஃபீல்ட் தண்டனை வழங்க முன்மொழிந்தார். நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை விவரித்து, சில விரைவான கருத்துக்களைக் கூறினார், மேலும் ப்ரூம்ஃபீல்ட் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறித்த கேள்வியில் ஒரு அறிக்கையை வெளியிட' வாய்ப்பு ஒன்றை வழங்கினார்.
தனது எழுத்துப்பூர்வமான அறிக்கையில் காந்தி சொல்கிறார். “ உங்களிடம் எனக்குக் கருணை காட்டும்படி கேட்டுக்கொள்ளப்போவதில்லை. சட்டப்படி குற்றமாகவும் குடிமகனாக எனது உச்சபட்ச செயலாகவும் கருதக்கூடிய இந்தக் குற்றத்துக்கு எந்த அளவுக்குக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடுமையான தண்டனை கொடுங்கள் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை நான் ஒப்படைக்கிறேன். ஒரு நீதிபதியாக உங்களுக்கு இருக்கும் ஒரே வழி உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப்போவது அல்லது நீங்கள் நிர்வகிக்கும் சட்டமும் அமைப்பும் மக்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைத்தால் எனக்குக் கடுமையான தண்டனையை வழங்குவது” என்று நீதிபதியிடம் கூறினார். இதைக் கேட்டு நீதிபதி அதிர்ந்து போனார்.
ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசுக்குத் தீவிரமான விசுவாசியாக ஒத்துழைப்புக் கொடுத்துவந்த காந்தி, அதற்கு எதிரானவராக மாறினார் என்பதற்கான காரணங்களை அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார். முதலாவது, மனிதத்தன்மையற்ற ரௌலட் சட்டம். இரண்டாவது, ஜாலியன்வாலா பாக் படுகொலை. மூன்றாவது, இந்திய முஸ்லிம்களை கிலாஃபத் விஷயத்தில் ஆங்கிலேய அரசு கைவிட்டது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரரீதியில் இந்தியாவின் நலிவுக்குக் காரணம் பிரிட்டன் என்பதுவும் தனது மனமாற்றத்துக்குக் காரணம்” என்று காந்தி குறிப்பிடுகிறார்.
இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஒத்துழையாமை இயக்கம் தேவைப்பட்டது என்கிறார். “என் பார்வையில், தீமையுடன் ஒத்துழைக்காமல் இருப்பதென்பது நன்மையுடன் ஒத்துழைப்பது போன்றதொரு கடமையே” என்று இறுதியாகச் சொல்லிவிட்டுத் தன் குற்றத்துக்குத் தண்டனையைக் கோருகிறார்.
அப்போது, நீதிபதி ” நான் வழக்கு விசாரணை நடத்திய மனிதர்களிலேயே நீங்கள் முற்றிலும் மாறுபட்டவர். உங்கள் நாட்டைச் சேர்ந்த மக்களின் மனதில் நீங்கள் மாபெரும் தேசப்பற்றாளராகவும் தலைவராகவும் இருக்கிறீர்கள் என்ற உண்மையையும் புறக்கணிக்க முடியாது. ஆனால், சட்டம் என்பது மனிதர்கள் மீது எவ்வித மதிப்பும் கொண்டிராதது. ஆகவே, குற்றத்தை நீங்களே ஒப்புக்கொண்டபடியால், உங்களுக்கு ஆறு ஆண்டுகள் தண்டனையை மிகுந்த வேதனையுடன் வழங்குகிறேன். எனினும் காலப்போக்கில் இந்திய அரசு இந்தத் தண்டனையைக் குறைத்து உங்களை விடுவிக்குமென்றால் என்னைவிட மகிழ்ச்சியடைபவர் யாரும் இருக்க முடியாது” என்று காந்திக்குத் தீர்ப்பெழுதிவிட்டு, அவரைப் பார்த்துக் கூறினார் நீதிபதி ப்ரூம்ஃபீல்டு. காந்திக்கு ஆறு ஆண்டுகளும் பாங்கருக்கு ஓராண்டும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இருவரும் மலர்ந்த முகத்துடனேயே தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றனர். சபர்மதி சிறையில் காந்தி அடைக்கப்பட்டார். சபர்மதியில்தான் காந்தியின் ஆசிரமமும் குடும்பத்தினரும் இருக்கிறார்கள் என்பதால், சபர்மதிச் சிறையில் காந்தியை வைத்திருப்பது சரியில்லை என்று கருதிய அரசு, அவரை மார்ச் 21, 1922 அன்று பூனா சிறைக்கு மாற்றியது. காந்தி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவருக்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குழுவினர் அவரைப் பார்க்க வரலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு கடிதத்தை காந்தி எழுதலாம். அதுவும் தணிக்கை செய்யப்பட்டே அனுப்பப்படும்.
சிறைத் தண்டனையை தென்னாப்பிரிக்கக் காலத்திலிருந்தே இயல்பாக ஏற்றவர் காந்தி. அவரது பல்வேறு சிறைவாசங்களின்போது பெரும்பாலான நேரத்தை வாசிப்பிலும் எழுதுவதிலும் மொழிகளைக் கற்றுக்கொள்வதிலும் கழித்திருக்கிறார். இந்தத் தண்டனைக் காலத்திலும் அப்படியே செய்தார்.
காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட தருணத்தை, சரோஜினி நாயுடுவின் வார்த்தைகளில் விவரிக்கையில், ' நீண்ட, மெதுவான ஊர்வலம் போல மிகுந்த வேதனையுடன் மக்கள் காந்தியை நோக்கி நகர்ந்தனர். காந்தியைச் சுற்றி மக்கள் திரண்டனர். சிலர் கதறி அழுது அவர் காலில் விழுந்தனர். மக்கள் கண்ணீருடன் காந்திக்கு பிரியாவிடைக் கொடுத்தனர். என்று எழுதினார்.
தி பாம்பே க்ரோனிக்கிள் என்ற செய்தித்தாள், இந்த நிகழ்வை 'உலகின் மாபெரும் மனிதர் மீதான விசாரணை ’யை சாக்ரடீஸின் வாக்கியத்தை நினைவுப்படுத்தி எழுதியது. காந்தி மக்களின் கூட்டத்தின் நடுவே, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எற்றுக் கொண்டு, எந்தவித சலனமும் இல்லாமல் புன்னகையுடன் (“cool and smiling”) நடந்து சென்றார். மக்கள் நாட்டிற்கே தண்டனை வழங்கப்பட்டதாக உணர்ந்தனர்.
reaking Live: ஜெயலலிதா மரண வழக்கில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜர்