Isreal Hamas War: 'இஸ்ரேல் - ஹமாஸ் போர்' இடையில் சிக்கித் தவிக்கும் மக்கள் - எப்போதுதான் விடிவு? ஓர் பார்வை
1000-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளைக் கொண்டு ஹமாஸ், யூத நாடான இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தி 48 மணி நேரம் கடந்துவிட்டது. இதில் 1,100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில், இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்ரேலியர்களே. இதற்கு இஸ்ரேலின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளனர். மேலும் சிலர் ஹமாஸை முற்றிலுமாக அழித்தொழிக்கவும், காஸாவை முழுமையாக அடிபணியச் செய்யவும் அழைப்பு விடுக்கின்றனர்.
”இதற்கிடையே ஹமாஸ் எப்படி உலக நாடுகளிடம் சித்தரிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது”.
இஸ்ரேல், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள், ஹமாஸைத் தீவிரவாத இயக்கம் என்றே குறிப்பிடுகின்றன. எனினும் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள், ஹமாஸை தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிட மறுத்துவிட்டன. கடந்த டிசம்பர் 2018-ல் 193 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதில், ஹமாஸை தீவிரவாத இயக்கம் என்று 87 நாடுகள் மட்டுமே குறிப்பிட்டன. இப்போது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் மோடி சொன்னாலும், அப்போது வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.
அரசியல் கட்சியான ஹமாஸ்
ஹமாஸ் என்பது ’இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்’ என்ற பொருள்படும் அரேபியச் சொல்லாகும். ஒரு காலத்தில் இது தேசியவாத இயக்கமாகவும் அரசியல் கட்சியாகவும் இருந்தது. ஹமாஸுக்கு ஆயுதப் பிரிவும் ஏன் சமூக சேவைப் பிரிவும்கூட இருந்தது. எனினும் ஹமாஸ் அரசியல் கட்சியாக இருந்ததை மேற்கத்திய நாடுகள் வசதியாகப் புறக்கணித்துவிட்டன. 2006 பாலஸ்தீன சட்டப்பேரவைத் தேர்தலில் ஹமாஸ் போட்டியிட்டது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தத் தேர்தலின் மூலம் பாலஸ்தீன அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றன.
அப்போது சர்வதேச பார்வையாளர்களாக இருந்த ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை, தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றதாக அறிவித்தன. இதில் ஆச்சரியப்படும் விதமாக, ஹமாஸ் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. எனினும் ஹமாஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா, கனடா.. பிறகு ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைத்தன. அத்துடன் பாலஸ்தீன மக்களின் விருப்பத்தையும் நாசமாக்கின.
இஸ்ரேல் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் ஹமாஸின் வரலாறு மேற்குலக நாடுகளால் முழுவதுமாக மறைக்கப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேநேரத்தில் பெண்களோ, ஆண்களோ, குழந்தைகளோ, முதியவர்களோ, மொத்தத்தில் பொது மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.
2 கேள்விகள்
இந்தப் போரின் நீண்ட கால விளைவு என்னவாக இருக்கும்? யாரிடமும் சரியான பதிலில்லை. எனினும் இரண்டு முக்கியக் கேள்விகள் மட்டும் என் மனதில் எழுகின்றன.
முதலாவது ஹமாஸால் வான், நிலம் மற்றும் கடலில் இருந்து எப்படி இஸ்ரேலின்மீது முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த முடிந்தது? உலகின் நவீன ராணுவத் தொழில்நுட்பம், அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பயிற்சியாளர்களைக் கொண்ட ராணுவம் இஸ்ரேல். சிறிதாக இருந்தாலும் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட நாடு இஸ்ரேல்.
தி கார்டியனுக்காக பீட்டர் பியூமண்ட் எழுதும்போது "இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதல் பல யுகங்களுக்கு, இஸ்ரேல் உளவுத்துறையின் தோல்வியாக நினைவுகூரப்படும்" என்று கூறி இருந்தார். பெகாசஸ் உளவு செயலி இஸ்ரேலில் உருவானதையும், அந்நாட்டின் சைபர் பிரிவு, அதன் பாதுகாப்புப் படைகளில் மிகப்பெரிதாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலே குறிப்பிட்ட அசாதாரணமான தொழில்நுட்பங்கள் இஸ்ரேலில் இருந்தும்கூட, ஹமாஸின் திடீர் ஊடுருவலுக்கு அந்நாடு தயாராக இருந்திருக்கவில்லை. ஹமாஸை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவுவதில் அவர்களின் புத்திசாலித்தனத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு இருக்கக்கூடும்.
இதனால் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை முறியடித்த ஹமாஸ், புல்டோசர்களைப் பயன்படுத்தி இஸ்ரேல்- காஸா எல்லை வேலியின் ஒரு பகுதியை வீழ்த்தி, இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்தது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளால் இதை முன்னரே அறிய முடியவில்லை. இதற்குப் பின்னால் பாலஸ்தீன மக்களின் சுதந்திர வேட்கையும் இருந்திருக்கலாம்.
சுதந்திரம் வேண்டும் பாலஸ்தீனியர்கள்
2007-ம் ஆண்டில் காஸா மீது இஸ்ரேல் கடுமையான மற்றும் சட்டவிரோத முற்றுகையை விதித்ததில் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் பூட்டி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு பாலஸ்தீனியரும் ஹமாஸை ஆதரிப்பதில்லை. எனினும் சுதந்திரத்தை விரும்பாத பாலஸ்தீனியரும் இல்லை.
இந்த நேரத்தில் ஹமாஸ் இஸ்ரேலை ஏன் தாக்க முயன்றது என்பதற்கான ஒரே காரணம் சவுதி அரேபியா- அமெரிக்கா இடையேயான நல்லிணக்கத்தை, ஹமாஸ் விரும்பவில்லை என்பதுதான். இது பொதுவான புவிசார் அரசியல் பார்வையாகும். அதேபோல இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதும் முக்கியக் காரணம்.
இரண்டாவது... புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய ஆதரவாளர்களான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பு நடந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. பாலஸ்தீனியர்களின் உரிமையைப் பறைசாற்றும் வகையில் ஐநா சபையில் டஜன் கணக்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், படிப்படியாக பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் அத்துமீறி நுழைந்து வருகிறது. வெஸ்ட் பேங்க் பகுதிகளில் யூதர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். இஸ்ரேலில் தீவிர வலதுசாரி யூதர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமைச்சரவையிலும் பங்கு வகிக்கின்றனர். இதை எதிர்த்தும் தாக்குதல் நடந்திருக்கலாம்.
இஸ்ரேல், ஹமாஸைத் தவிடுபொடியாக்கும்
நான் ஏற்கெனவே கூறியதைப்போல, ஒருவர் கட்டாயம் வன்முறையைக் கண்டிக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும். இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் வெற்றிபெற முடியாது. அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் அல்லது உதவி இல்லாமலேயே, இஸ்ரேல், ஹமாஸைத் தவிடுபொடியாக்கும்.
எனினும் ஏற்கனவே ஏராளமானற்றைச் சகித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்கள், இனிமேலாவது இந்த கொடூரமான விதியில் இருந்து விடுபடுவதை உலகமே ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும்.
வினய் லால், வரலாற்றுப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்
(தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி)