தூத்துக்குடி டிராகன் வின்ஃபாஸ்ட்.. VF 6, VF 7 ஈவி காரின் விலை இதுதான் - 500 கி.மீட்டர் பறக்கலாம்
Vinfast Car Price: தூத்துக்குடியில் தயாராகி வரும் வின்ஃபாஸ்ட் காரின் விலை எவ்வளவு? என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vinfast Car Price: இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பிற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் திறக்கப்பட்ட தொழிற்சாலை வின்பாஸ்ட் கார் உற்பத்தி தொழிற்சாலை.
VF6 மற்றும் VF7 காரின் விலை எவ்வளவு?
மின்சார கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் இந்த கார் தூத்துக்குடியில் VF6 மற்றும் VF7 மின்சார கார்களை தயாரித்துள்ளது. இந்த கார்களின் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

VF6 காரின் அடிப்படை மாடலின் தொடக்க விலை ரூபாய் 16.49 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. VF7 காரின் தொடக்க விலை ரூபாய் 20.89 லட்சம் ஆகும். அதிகபட்சமாக இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 25.49 லட்சம் வரை விற்பனையாக உள்ளது.
500 கி.மீட்டர் ரேஞ்ச்:
VF6 கார் 5 இருக்கைகளை கொண்டது. இதன் பேட்டரி 59.6 கிலோவாட் திறன் கொண்டது. இந்த காரை விகிரீன் சார்ஜிங் ஸ்டேஷனில் 2028 ஜுலை வரை இலவசமாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். 3 ஆண்டுகள் வரை இலவச பராமரிப்பு சலுகையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 468 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். பனோராமிக் கிளாஸ் கூரை இந்த காரின் மேற்புறத்தில் உள்ளது.
VF7 காரின் பேட்டரி திறன் 70.8 கிலோவாட் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். VF6 காரில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களும் VF7 காரிலும் உள்ளது. இந்த கார்களுக்கு 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வாரண்டி அளித்துள்ளனர்.
7 ஏர்பேக்குகள்:
VF6 கார் 174 குதிரைத் திறனையும், 250 என்எம் டார்க் இழுதிறனையும் கொண்டுள்ளது. VF6 காரில் WLTP சான்றிதழ்படி எகோ வேரியண்டில் ட்ரூ ரேஞ்ச் 399 கி.மீட்டராகவும், ப்ளஸ் ட்ரீம்மில் 381 கி.மீட்டராகவும் உள்ளது. VF7 காரில் WLTP -படி ட்ரூ ரேஞ்ச் 451 கி.மீட்டராக உள்ளது.

இந்த காரில் 12.9 இன்ச் டச் ஸ்கீரின் தொடுதிரை உள்ளது. செல்போனை இணைத்துக் கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 7 ஏர்பேக்குகள் உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குவியும் ஆர்டர்கள்:
வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார்களை வாங்குவதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்துள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை தூத்துக்குடியில் தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த தயாரிப்பை மேலும் அதிகரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வின்ஃபாஸ்ட் காரை வாங்குவதற்கு நேபாளம், இலங்கை, பூடான், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் முன்பதிவு குவிந்து வருகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நீடித்த காலத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார கார்களின் உற்பத்தியில் டாடா, மஹிந்திரா ஆகிய முன்னணி நிறுவனங்கள் உள்ளன. மின்சார கார்கள் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் உள்ள நிலையில், தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனமும் சந்தையில் களமிறங்கியுள்ளது. போட்டி நிறுவனங்களை சமாளித்து இந்தியாவில் வின்ஃபாஸ்ட் கார்களின் விற்பனை வெற்றிகரமாக தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.





















