Nissan Tekton SUV: டிசைனில் மிரட்டும் நிசானின் டெக்டான் - காரை வாங்க தூண்டும் 5 டீடெயில்ஸ், கூல் லுக், மாஸ் டெக்
Nissan Tekton SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள நிசானின் டெக்டான் கார் மாடல் குறித்து, சில முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Nissan Tekton SUV: நிசானின் டெக்டான் கார் மாடல் குறித்து அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நிசான் டெக்டான்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக போட்டித்தன்மை மிக்க மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில், வலுவான கம்பேக்கை பதிவு செய்ய நிசான் நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தனது புதிய டெக்டான் கார் மாடலை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதில், அடுத்த தலைமுறை ரெனால்ட் டஸ்டருக்கான ஃபாளட்ஃபார்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள ரெனால்ட் - நிசானின் கூட்டு ஆலையில் டெக்டான் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்நிலையில், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யுவி குறித்து நீங்கள் அறிய வேண்டிய சில முக்கிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. CMF-B ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ள ரெனால்டின் அடுத்த தலைமுறை டஸ்டர் கார் மாடலின் கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, அதே CMF-B ப்ளாட்ஃபார்ம் தான் நிசானின் டெக்டானிற்கும் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச அளவிலான பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரநிலைகள் அப்படியே பின்பற்றினாலும், பெரும்பாலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பகிரப்பட்ட இந்த கார்களின் ஒரே மாதிரியான கட்டமைப்பானது, 2027ம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய 7 சீட்டர் உட்பட, பல புதிய பாடி ஸ்டைல் கொண்ட கார்களை அறிமுகப்படுத்தவும் வழிவகுக்கிறது.
2. டிசைனில் நிசான் பேட்ரோல் மாடலின் தாக்கம்
டெக்டான் கார் மாடலின் வடிவமைப்பானது நிசானின் புகழ்பெற்ற பேட்ரோல் கார் மாடலின் பெரிய தாக்கத்தை பிரதிபலித்து, நிமிர்ந்த முன்பக்கம் மற்றும் கட்டுமஸ்தான உடல்வாகுவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செதுக்கப்பட்ட பானெட், C-வடிவிலான எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் தீவிரமான பம்பர் இடம்பெற்றுள்ளன. பக்கவாட்டில் கதவுகளில் Double C மையக்கருத்தை காட்டுகிறது. பின்புறத்தில் முழு அகலத்திற்குமான எல்இடி லைட் பார் மற்றும் டெயில்கேட்டில் மிகப்பெரிய அளவில் டெக்டான் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
3. ப்ரீமியம் கேபின் & உயர்ரக அம்சங்கள்
நிசான் நிறுவனம் டெக்டனின் உட்புற அம்சங்கள் தொடர்பான தகவல்களை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. ஆனால், எதிர்பார்ப்புகள் என்பது டாப் ரேஞ்சில் நிலவுகிறது. அதன்படி இந்த எஸ்யுவியில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முற்றிலும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சாஃப்ட் டச் மெட்டீரியல்ஸ், ADAS தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் பல சிறப்பம்சங்களாக பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர் பேக்குகள் மற்றும் பவர்ட் ட்ரைவட் சீட் ஆகியவையும் அங்கம் வகிக்க வாய்ப்புள்ளதாம்.
4. பெட்ரோல் & ஹைப்ரிட் பவர்ட்ரெயின்ஸ்
டெக்டான் கார் மாடல் ஆரம்பகட்டத்தில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம். சிறிய இடைவெளிக்குப் பிறகு வலுவான ஹைப்ரிட் ஆப்ஷனும் இதில் அறிமுகப்படுத்தப்படலாம். சில டாப் என்ட் வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் அம்சமும் வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
5. இந்திய சந்தையில் போட்டியாளர்கள்:
இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஏற்கனவே பிரபலமாக உள்ள பல முன்னணி கார் மாடல்களுடன், நிசானின் டெக்டான் போட்டியிட உள்ளது. அந்த பட்டியலில் ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர், ஸ்கோடா குஷக், ஃபோக்ஸ்வாகன் டைகுன், ஹோண்டா எலிவேட், மாருதி சுசூகி விக்டோரிஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் என பல போட்டியாளர்கள் சந்தையில் உள்ளனர். டெக்டான் கார் மாடலின் விலை 10 லட்சத்தில் தொடங்கி 19 லட்சம் வரை நீளக்கூடும் என கூறப்படுகிறது.




















