Hyundai Upcoming Cars: வென்யு தொடங்கி செம்ம அடி வாங்கிய அயோனிக் வரை - ஹுண்டாயின் டாப் 4 புதிய கார்கள்
Hyundai Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள, 4 புதிய கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Hyundai Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் அப்க்ரேட் செய்யப்பட்ட 2 எஸ்யுவிக்கள் உட்பட 4 புதிய கார்களை விரைவில் சந்தைப்படுத்த உள்ளது.
ஹுண்டாயின் 4 புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த 8 முதல் 12 மாதங்களில், பல்வேறு புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் சில கார் மாடல்கள் அண்மையில் சாலை சோதனையில் ஈடுபட்டபோது புகைப்படங்களில் சிக்கின. அதில் சில புதிய தலைமுறை கார்களுக்கு மத்தியில், மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப் அப்க்ரேட்களை பெற்ற ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில கார்களும் அடங்கும். அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனம் சார்பில் விரைவில் அறிமுகமாக உள்ள சில கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஹுண்டாயின் புதிய தலைமுறை வென்யு
ஹுண்டாய் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன வென்யு மாடலின் புதிய தலைமுறை கார் மாடலானது, வரும் அக்டோபர் 24ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே முழுமையாக மற்றும் பாதியளவு மறைக்கப்பட்ட சூழலில் பலமுறை சாலை சோதனையில் ஈடுபட்டதை காண முடிந்தது. புதிய தலைமுறை எஸ்யுவி ஆனது ஸ்டைலிங்,கேபின் மற்றும் அம்சங்களில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை பெற உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS வசதி இடம்பெறக்கூடும்.
இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இன்றி, 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்களை அப்படியே தொடர உள்ளதாம். ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் அப்படியே நீடிக்கக் கூடும் என்றும், டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டும் iMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு சந்தையில் புதிய தலைமுறை வென்யுவானது, மாருதி ப்ரேஸ்ஸா, கியா சோனெட், ஸ்கோடா கைலாக் மற்றும் டாடா நெக்சான் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
2. ஹுண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் 2026
புதிய தலைமுறை i20 கார் மாடலானது அண்மையில் ஹரியானாவில் சாலை பரிசோதனையின் போது புகைப்படங்களில் சிக்கியது. அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த கார் உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் இந்த ஹேட்ச்பேக்கின் எடிஷனானது, 3 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய எடிஷனில் ரூஃப் ரெயில் இருக்காது என்பதை புகைப்படங்கள் உணர்த்துகின்றன. இதன் டிசைனில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம், இதன் மிக முக்கிய போட்டியாளரான டாடாவின் ஆல்ட்ரோஸ் அண்மையில் தான் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் என்ற பெயரில், பெரும் மாற்றங்களுடன் அதிகப்படியான அம்சங்களை கூடுதலாக பெற்றது. எனவே i20 கார் மாடலும் தற்போது இருப்பதை காட்டிலும் ப்ரீமியம் அம்சங்களை பெறக்கூடும் என கருதப்படுகிறது. அதன்படி, 12.3 இன்ச் அளவிலான ஓட்டுனருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறலாம். 360 டிகிரி கேமரா உடன் கூடிய லெவல் 1 ADAS வசதி வழங்கப்படலாம். இதில் இன்ஜின் அடிப்படையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஹுண்டாய் வெர்னா
நான்காவது தலைமுறை வெர்னா காரானது கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை ஹுண்டாய் தற்போது தயார்படுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ சந்தைப்படுத்தலுக்கு முன்பாக, அண்மையில் சென்னையில் இந்த கார் சாலை சோதனையின் போது சிக்கியது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட பம்பர், புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முன் கிரில் என க்ரில் மிக லேசானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கேபினுக்குள் ஆராய்ந்தால் ஹூண்டாய் நிறுவனம் வெர்னாவை இன்னும் விரும்பத்தக்கதாக மாற்றவும், அதன் போட்டியாளர்களான ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் போன்றவற்றின் பிரீமியம் அம்சங்களை ஈடுசெய்யவும் முக்கிய மாற்றங்களை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை ஹூண்டாய் வெர்னா 8-இன்ச் மற்றும் 10.25-இன்ச் டச்-ஸ்க்ரீன்களை பெற்றிருக்கிறது. ஆனால் புதிய தலைமுறை மாடலில் பெரிய 12.3-இன்ச் இரட்டை ஸ்க்ரீன் இடம்பெறலாம். பின்புற இருக்கைகள் புதிய எடிஷன் வெண்டிலேஷன் அம்சத்தையும் பெறலாம். இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
4. ஹுண்டாய் அயோனிக் 5
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் செடான், விரைவில் மேம்படுத்தப்பட்ட எடிஷனாக சந்தைப்படுத்தப்பட உள்ளது. இது ஏற்கனவே உலகளாவிய சந்தைகளில் வெளியாகிவிட்ட நிலையில், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இதில் தோற்ற மேம்பாடுகள், கூடுதல் கம்ஃபர்ட் அம்சங்கள் மற்றும் அதிகப்படியான ரேஞ்சை பெறுகிறது. பேட்டரி பேக் முன்பை விட பெரியது என்பதால், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிரது. இது இந்தியாவில் பிராண்டின் முதன்மையான மின்சார மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024ம் ஆண்டு இந்த காரின் ஒருங்கிணைந்த சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டில் பெரும் சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இதனால் விற்பனையில் கடுமையான சரிவை கண்டது. இந்நிலையில் சந்தைப்படுத்தப்பட உள்ள புதிய எடிஷன், அந்த சிக்கலை தவிர்த்து விற்பனையில் அசத்துமா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















