TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில், பிரபல மேடைப் பேச்சாளரும், அரயில்வாதியுமான நாஞ்சில் சம்பத் நேற்று இணைந்தார். இந்நிலையில், இன்று அவர் கட்சியின் பரப்புரை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில், பிரபல மேடை பேச்சாளரும், அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் நேற்று இணைந்தது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியது. இந்நிலையில், இன்று அவருக்கு கட்சியின் பரப்புரை செயலாளர் பதவியை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
தவெக-வின் பரப்புரை செயலாளராக நியமிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்
இது குறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள். தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.“ என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர். பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.“ என்றும் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தவெகவில் இணைந்துவரும் முக்கிய அரசியல்வாதிகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முக்கிய கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். சிலர் மாற்றுக் கட்சிகளை தேடி ஐக்கியமான நிலையில், சமீபத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது மேடைப் பேச்சுக்காகவே பிரபலமாக உள்ள நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பயணம்
கன்னியாகுமரி மணக்காவிளை என்ற ஊரை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திராவிட கொள்கைகளில் பற்று கொண்டிருந்த அவர், திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன்பேரில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர், 2016-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பிரிந்தபோது இவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்தார். தொடர்ந்து டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அந்த கட்சி பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா பெயர் இல்லை எனக் கூறி, அதிலிருந்து வெளியேறினார் நாஞ்சில் சம்பத். அதன்பிறகு எந்த கட்சியிலும் இணையாமல் மேடை பேச்சாளராக திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் மதிமுகவில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியபோது அதன் மேடைகளில் நாஞ்சில் சம்பத்தும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அவர் இணைந்துள்ளார்.





















