IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: தென்னாப்பிரிக்க அணி கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. 19 ஒருநாள் போட்டிக்கு பிறகு 20வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதிரடியாக தொடங்கிய தென்னாப்பிரிக்கா:
இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய ரிக்கெல்டன் அர்ஷ்தீப் சிங் பந்தில் டக் அவுட்டானார். அவருக்கு பிறகு கேப்டன் பவுமா டி காக்குடன் ஜோடி சேர்ந்தார். டி காக் அதிரடியாக ஆடினார். அவருக்கு பவுமா ஒத்துழைப்பு அளித்தார். அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, குல்தீப் என யார் வீசினாலும் விளாசினார். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் ரன்ரேட் புயல் வேகத்தில் ஏறியது.
1 ரன்னில் சேர்ந்த இந்த ஜோடி 114 ரன்னில் பிரிந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் பவுமா அரைசதத்தை நோக்கி நெருங்கிய நிலையில் அவுட்டானார். அவர் 67 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு, இந்திய பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தியது. டி காக் ஒருபுறம் அரைசதம் கடந்து அதிரடியாக ஆடினார்.
டி காக் சதம்:
ப்ரீட்ஸ்கே அவருக்கு ஒத்துழைப்பு அளித்துக் கொண்டிருக்க டி காக் சதம் விளாசினார். ப்ரீட்ஸ்கே 24 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டாக, கடந்த போட்டியில் சதம் விளாசிய மார்க்ரம் 1 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில், சதம் விளாசிய டி காக் பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார். அவர் 89 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதன்பின்பு இந்திய பந்துவீச்சு ஆட்டத்தை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அபாயகரமான பேட்ஸ்மேன் ப்ரெவிஸ் 29 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்னில் அவுட்டாக, யான்சென் 17 ரன்னில் அவுட்டாக 29வது ஓவரில் 168 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி அடுத்த 20 ஓவரில் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 48வது ஓவரில் 1 பந்து எஞ்சியிருந்தபோது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா 270 ரன்களை எடுத்தது.
பிரசித், குல்தீப் மிரட்டல்:
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 1 ஓவரை மெய்டனாக்கி 4 விக்கெட் வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப்சிங், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
271 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி இந்திய அணி ஆடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சேசிங் செய்வது இதுவே முதன்முறை ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெற உள்ளது.




















