December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
December Rain: தமிழகத்தில் டிசம்பர் மாதம் என்றாலே மக்கள் அலறுவார்கள். அதற்கு ஏற்றார் போல அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மற்றும் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் கணித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல இடங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை கொட்டியது. ஆனால் வட மாவட்டங்களில் நவம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத வகையில் குறைவான மழை அளவை கொண்ட மாதமாக அமைந்தது. ஆனால் டிசம்பர் மாதம் தொடக்கமே அதிரடியாக ஆரம்பித்தது. டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டுவிட்டு தமிழகத்தில் நுழைந்தது. இதனால் ராமநாதபுரம்,நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றோடு மழை பெய்தது.
சென்னையில் வெளுத்து வாங்கிய டிட்வா
இந்த டிட்வா புயல் தெற்கு ஆந்திராவிற்கு செல்லும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக சென்னைக்கு அருகிலேயே 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 4 நாட்கள் பெய்தது. ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று தான் சென்னையில் சூரியன் தலைகாட்டியது. எனவே அடுத்த ஒரு வராத்திற்கு மழைக்கான இடைவேளி இருக்கும் என வானிலைய ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
டிசம்பரில் அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னம்
இந்த நிலையில் டிசம்பம் மாதம் முடிவடைவதற்குள் அடுத்தடுத்து 3 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிகழ்வு தற்போது வலுகுறைய துவங்கியுள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலில் லாநினா அமைப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக லாநினா, எதிர்மறை IOD, கடல் வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகளின் சாதகமான நிலைகள் டிசம்பர் மாதத்தில் இயல்பிற்கு அதிக மழைப்பொழிவிற்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாத வானிலை எதிர்ப்பார்ப்பு:
டிசம்பர் 10 முதல் 12 காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்த கீழைக்காற்றின் காரணமாக 5ம் சுற்று மழை துவங்கி கடலோர மாவட்டங்களில் பரவலாக மழையை கொடுக்க வாய்ப்பு
டிசம்பர் 15ம் தேதிக்கு பின்பு அடுத்தடுத்து தாழ்வு பகுதிகள் உருவாக கூடும். இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
டிசம்பர் 15 முதல் 21க்கு இடைப்பட்ட தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி பருவமழையை தீவிரப்படுத்தும்.
டிசம்பர் 4 வது வாரத்தில் தெற்கு வங்ககடலில் உருவாக கூடிய தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுபெற வாய்ப்பு.
ஜனவரியிலும் மழை தொடரும்
எனவே ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாத மழை இயல்பிற்கு அதிகமாக அமைந்து, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களுக்கு நல்ல மழைப்பொழிவை கொடுக்கும். மேலும் வட மாவட்டங்கள், காவிரி டெல்டா, தென் மாவட்டங்களுக்கு மேலும் இரண்டு தீவிரமான வடகிழக்கு பருவமழை சுற்றுகள் ஜனவரி முதல் வாரத்திற்குள் மழையை கொடுக்கும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.





















