Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில், முருங்கை இலை சூப் தொடங்கி கேசர்-பிஸ்தா குல்ஃபி வரை, தடபுடலான விருந்து பரிமாறப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, நேற்று இரவு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அளித்த அரசு விருந்தில், ஆடம்பரமான, முற்றிலும் சைவ உணவு வகைகளை வழங்கப்பட்டுள்ளன.
புதினுக்கு முருங்கை இலை சூப்புடன் தடபுடல் விருந்து
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உணவுகள் விருந்தாக பரிமாறப்பட்டன. தென்னிந்திய ரசம்(சூப்) முருங்கை இலை சாருடன் விருந்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து, குச்சி டூன் செடின்(காஷ்மீரி வால்நட் சட்னியுடன் நிரப்பப்பட்ட மோரல்ஸ்), காலே சேன் கே ஷிகாம்பூரி(பான்-கிரில் செய்யப்பட்ட கருப்பு பயறு கபாப்ஸ்) மற்றும் காரமான சட்னியுடன் காய்கறி ஜோல் மோமோ போன்ற பசியைத் தூண்டும் உணவுகள் வழங்கப்பட்டன. காஷ்மீர் முதல் கிழக்கு இமயமலை வரையிலான சமையல் மரபுகளின் கலவையாக இந்த விருந்து அமைந்திருந்தது.
ஜஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேத்தி மட்டர் கா சாக், தந்தூரி பர்வான் ஆலு, ஆச்சாரி பைங்கன் மற்றும் மஞ்சள் தால் தட்கா, உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூ புலாவ் ஆகியவற்றுடன், லச்சா பராத்தா, மகஸ் நான், சதனாஜ் ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி மற்றும் பிஸ்கட் ரொட்டி போன்ற இந்திய ரொட்டிகளுடன் பிரதான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
டெசர்ட் வகைகளில், பாதாம் கா ஹல்வா, கேசர்-பிஸ்தா குல்ஃபி, புதிய பழங்கள், குர் சந்தேஷ், முரக்கு போன்ற பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் உள்ளிட்ட வகைகள் இடம்பெற்றன. மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய ஆரோக்கியமான பானங்களும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பரிமாறப்பட்டது.
இந்திய-ரஷ்ய கலவையுடன் இசை நிகழ்ச்சி
இந்திய பாரம்பரிய இசையை ரஷ்ய மெல்லிசைகளுடன் இணைத்து ராஷ்டிரபதி பவன் கடற்படை இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இந்த நிகழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றது. 'அமிர்தவர்ஷினி', 'காமஜ்', 'யமன்', 'சிவரஞ்சினி', 'நளினகாந்தி', 'பைரவி' மற்றும் 'தேஷ்' போன்ற இந்திய ராகங்களும், கலிங்கா மற்றும் ச்சாய்கோவ்ஸ்கியின் நட்கிராக்கர் சூட்-ல் இருந்து சில பகுதிகள் உள்ளிட்ட ரஷ்ய மெல்லிசைகளும், பிரபலமான இந்தி திரைப்படப் பாடலான 'ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி'யும் இந்த இசைத் தொகுப்பில் இடம்பெற்றன.
புதின் கூறியது என்ன.?
இந்த நிகழ்வின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை புதின் எடுத்துரைத்தார். தானும், பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்ட பிரகடனம், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எரிசக்தி, கல்வி மற்றும் பிற துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியது என்பதைக் குறிப்பிட்டார். "நியாயமான உலக ஒழுங்கை" நிறுவ இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்றும், இந்தியா-ரஷ்யா கூட்டாண்மையின் தன்மையை "ஒன்றாகச் செயல்பட்டு, ஒன்றாக வளருங்கள்" என்றும் அவர் விவரித்தார்.
இரவு உணவிற்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் இருந்து புறப்பட்டார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்தார்.





















