Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Toyota Innova Crysta: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விற்பனையை நிறுத்த டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Toyota Innova Crysta: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2027ம் ஆண்டிற்குப் பிறகு இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விற்பனை தொடராது என கூறப்படுகிறது.
இன்னோவா க்ரிஸ்டாவை கைவிடும் டொயோட்டா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா நிறுவனம் ஒருவழியாக வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்துடன், இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலின் விற்பனையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரானது கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு சந்தையின் எம்பிவி பிரிவை சிறப்பானதாக மேம்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 2025ம் ஆண்டிலேயே நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த லேடர் ஃப்ரேம் எம்பிவி ஆனது, தற்போது வரை 2.4 லிட்டர் டீசல் இன்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து சந்தையில் நிலவிய தேவை மற்றும் இன்னொவா ஹைக்ராஸிற்கான செமிகண்டக்டர்கள் கிடைப்பதில் நிலவிய சிக்கல் ஆகியவற்றால், க்ரிஸ்டாவை சந்தையில் இருந்து நீக்கும் முடிவை டொயோட்டா தாமதப்படுத்தி வருகிறதாம். இதுதொடர்பாக துறைசார் வல்லுநர்கள் மின்னஞ்சல் வழியாக எழுப்பிய கேள்விக்கு, தற்போது வரை டொயோட்டா சார்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்னோவா க்ரிஸ்டா அவுட்-டேட் ஆனது ஏன்?
கார்பன் - டை - ஆக்ஸைட் உமிழ்வு கண்ணோட்டத்தில் வரவிருக்கும் கடுமையான CAFE 3 விதிமுறைகள் லேடர் ஃப்ரேம் டீசல் MPV-ஐ மோசமாக பாதிக்க வாய்ப்புள்ளன. அதோடு ஏற்கனவே இன்னொவா விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்ப ஹைப்ரிட் மாடலை முழு வீச்சில் முன்னிலைப்படுத்தி வருகிறது. தனது ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதன் மூலம் CAFE 3 இன் கடுமையான CO2 உமிழ்வு விதிகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. நடைமுறையில், டொயோட்டா விற்கும் ஒவ்வொரு ஹைப்ரிட் இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலும், கார்ப்பரேட் சராசரி எரிபொருள் பயன்பாட்டை இரண்டு மடங்கு குறைக்கிறது. இது கனரக டீசல் MPVகள் மற்றும் SUVகளில் இருந்து அதிக CO2 உமிழ்வை நேரடியாக ஈடுசெய்ய உதவுகிறது. ஃபார்ச்சூனர் டீசல் நிறுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 2029 இல் வெளியிடப்படும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் FJ-க்கு டீசல் விருப்பம் இருக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்?
இந்திய சந்தையில் இருந்து க்ரிஸ்டா நிறுத்தப்படும்போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, அதற்கு நேரடியான போட்டியாளரோ அல்லது மாற்றோ இந்திய சந்தையில் தற்போது இல்லை. மஹிந்த்ரா மற்றும் டாடாவில் நீளமான டீசல் எடிஷன் கார்கள் இருந்தாலும், அவை அவை இன்னோவாவிற்கு நிகரானதாக இல்லை. அதேநேரம், ஹுண்டாய் நிறுவனமானது பெரிய அளவில் உள்ளூரிலேயே தயாரித்து ஸ்டாரியா மாடலை சந்தைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அது க்ரிஸ்டாவின் வெற்றிடத்தை நிரப்பும் என கூறப்படுகிறது. 2027 ஆம் ஆண்டில் கிரிஸ்டா வெளியேறும் நேரம் நெருங்கி வருவதால், டீசல் MPV களின் இடம் போட்டியாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம். SUV-களுக்கு அப்பால் சிந்திக்கவும், மிகவும் தீவிரமான MPV மாடலை கொண்டு வரவும் வாய்ப்புகளை உருவாக்கலாம்.





















