Suzuki Vision e-Sky BEV: மாருதியின் புதிய எண்ட்ரி லெவல் மின்சார கார் - 270கிமீ ரேஞ்ச், அம்சம், விலை விவரங்கள்
Suzuki Vision e-Sky BEV: மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் மின்சார காரின் கான்செப்ட்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Suzuki Vision e-Sky BEV: மாருதி சுசூகி நிறுவனம் புதிய எண்ட்ரி லெவல் மின்சார காரை, விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
சுசூகியின் புதிய காம்பேக்ட் மின்சார எஸ்யுவி
சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன், அக்டோபர் 30 முதல் நவம்பர் 9, 2025 வரை டோக்கியோ பிக் சைட்டில் நடைபெறவிருக்கும், ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025க்கான தனது காட்சிப்படுத்தல் முடிவுகளை அறிவித்துள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் மின்சார காரான, விசியன் e-Sky-யின் கான்செப்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரானது பார்ன் - EV கான்செப்டில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் புதிய ”யூனிக், ஸ்மார்ட், பாசிடிவ்” டிசைன் கொள்கையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
விசியன் e-Sky கான்செப்ட் - வெளிப்புறம், வடிவமைப்பு:
காரின் முன்புறத்தில் இரண்டு ஸ்டைலிஷான எல்இடி எலிமெண்ட்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக மல்டி-அரே எல்இடி பாரானது முன் மற்றும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த லைட் பாரின் பக்கவாட்டில் முதன்மை ஹெட்லைட்கள் மற்றும் அவற்றின் C-வடிவ DRLகள் உள்ளன. பருமனான C-பில்லர் கூரைக்கும் பிரதான உடலுக்கும் இடையில் மிதப்பதை போன்று காட்சியளிக்கிறது. இது காருக்கு ஒரு சமகால தோற்றத்தை அளிக்கிறது.
மேலும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், ஏரோடைனமிகல் வடிவிலான இறக்கை கண்ணாடிகள் மற்றும் ஒருங்கிணைந்த LED ஸ்டாப் லைட்டுடன் கூடிய நுட்பமான கூரை ஸ்பாய்லர் ஆகியவற்றை பெற்றுள்ளது. விஷன் இ-ஸ்கையின் தட்டையான முன் மற்றும் பின்புறம், குறுகிய முன் மற்றும் பின்புற ஓவர்ஹாங்க்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பானது பயணிகளுக்கு ஒதுக்கப்படும் இடத்தின் அளவை தீர்மானிக்கும்.
விசியன் e-Sky கான்செப்ட் - அளவீடு
விஷன் இ-ஸ்கையின் அதிகாரப்பூர்வ ரெண்டரிங், நேர் எதிர் வெள்ளை கூரை மற்றும் கருப்பு நிற கதவு தூண்களுடன் டூயல் டோன் ஆப்ஷனை கொண்டுள்ளது. இது நுட்பமாக விரிவடைந்த சக்கர வளைவுகள் மற்றும் ஏரோ-நட்பு சக்கரங்களைக் கொண்ட BEV ஐயும் காட்டுகிறது. சுசூகி விஷன் இ-ஸ்கை 3,395 மிமீ நீளம், 1,475 மிமீ அகலம் மற்றும் 1,625 மிமீ உயரம் கொண்டுள்ளது. இது மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோவை விட உயரமாக அமைந்துள்ளது. ஆனால் அதன் நீளம் மற்றும் அகல புள்ளிவிவரங்கள் எஸ்-பிரஸ்ஸோவை விட குறைவாக உள்ளன.
விசியன் e-Sky கான்செப்ட் - உட்புற வடிவமைப்பு
வெளிப்புறத்தை போன்று உட்புறத்திலும் இந்த காரானது மாடர்ன் டச்களை பெற்றுள்ளது.ஸ்டீயரிங் வீலை கவனித்தால், க்ளோஸ் ப்ளாக் ட்ரிம்மில் பொருத்தப்பட்டுள்ள பல செயல்பாட்டு பொத்தான்களை இது ஒருங்கிணைக்கிறது. இரட்டை டிஜிட்டல் ஸ்க்ரீன்கள் உள்ளன. அதில் ஓட்டுனருக்கான ஸ்க்ரீன் ஆனது பேட்டரியின் சார்ஜ் நிலை மற்றும் வரம்பு போன்ற முக்கிய தகவல்களைக் காட்டுகிறது. கூடுதலாக வாகனத்தின் வேகம் மற்றும் வெளிப்புற விளக்குகளின் நிலையையும் அறியலாம்.
ஃப்ளோட்டிங் டேஷ்போர்ட் சுற்றி அமைக்கப்பட்ட கேபின் வடிவமைப்போடு நன்றாகப் பொருந்துகிறது. அதே நேரத்தில் உட்புறத்தில் வைக்கப்பட்டுள்ள LED லைட் ஸ்ட்ரிப்கள் அதன் ஒட்டுமொத்த சூழலை மேலும் உயர்த்துகின்றன. விஷன் இ-ஸ்கையின் டிரைவ் செலக்டர் டேஷ்போர்டுக்குக் கீழே அமைந்துள்ளது, இது P, R, N, D க்கு இடையிலான மாற்றத்தை தொந்தரவில்லாமல் செய்ய உதவுகிறது.
கேபின் முழுவதும் நீலம் மற்றும் ஊதா நிற ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன் இருக்கைகளின் கீழ் பகுதி மற்றும் முழு ஆர்ம்ரெஸ்ட்களும் பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளன. முன் இருக்கைகளின் ஸ்ப்ளிட்-டைப் டிசைனனது நேர்த்தியாகத் தெரிகிறது மற்றும் பிரீமியம் உணர்வைத் தூண்டுகிறது.
விசியன் e-Sky கான்செப்ட் - வெளியீடு எப்போது?
சுசூகியின் விஷன் இ-ஸ்கையின் தயாரிப்பு எடிஷன் நிதியாண்டு 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் என்றாலும், உலகளாவிய வெளியீடு குறித்த கூடுதல் விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. இருப்பினும், 2026-27 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக திட்டமிடப்பட்ட K-EV தளத்தை அடிப்படையாகக் கொண்ட, பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட மாருதி மின்சார ஹேட்ச்பேக்கிற்கான வாய்ப்பு உள்ளது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் எனவும், மாருதிக்கே உரிய வகையில் போட்டித்தன்மை மிக்க வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.





















