SUV Vs Hatchback: கொடிகட்டி பறக்கும் எஸ்யுவி, அட்ரெஸ் இல்லாமல் போகும் ஹேட்ச் பேக் - காரணம் என்ன?
SUV Vs Hatchback: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி கார்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

SUV Vs Hatchback: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்கள் தனக்கான இடத்தை தொடர்ந்து இழந்து வருகிறது.
எஸ்யுவிக்களின் ஆதிக்கம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி கார்களின் ஆதிக்கம் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. அதேநேரம், என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் மாடல்களை பரிசீலிப்பது மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, கார் உற்பத்தியாளர்கள் பலதரப்பட்ட மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஏராளமான புதுப்புது எஸ்யுவிக்களை தொடர்ந்து சந்தைப்படுத்தி வருகின்றனர். பயணிகள் வாகன பிரிவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றமானது, சொகுசு வசதிகள் நிறைந்த ப்ரீமியம் கார்களை நோக்கி இந்தியர்கள் சீரான வேகத்தில் நகர்ந்து வருவதை காட்டுகிறது.
அட்ரெஸ் இல்லாமல் போகும் ஹேட்ச்பெக்:
இந்திய ஆராய்ச்சி நிறுவனமான SOIC, “Premiumisation: India's Next Consumption Wave" என்ற தலைப்பிலான தங்களது ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு சந்தையில் ஹேட்ச்பேக்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதேநேரம் கார் வாங்குபவர்களுக்கு எஸ்யுவி மாடல்கள் பிரதான தேர்வாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் விற்கப்படும் ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்களில், கிட்டத்தட்ட பாதி SUV-க்களாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹேட்ச்பேக் சந்தையை பிடித்த எஸ்யுவி
2018-19 நிதியாண்டுக்கும் 2023-24 நிதியாண்டுக்கும் இடைபட்ட காலத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகள், என்ட்ரி லெவல் மற்றும் ப்ரீமியம் SUV-க்களின் சில்லறை விற்பனையில் ஏற்பட்டுள்ள கூர்மையான ஏற்றமானது, ஹேட்ச்பேக் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு சமமாக இருப்பதை காட்டுகிறது. இது இந்திய ஆட்டோமொபைல் துறை வேகமாக பிரீமியம்மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருவதை தெளிவாகக் குறிக்கிறது. இதனை உணர்ந்தே, "மஹிந்திரா நிறுவனம் செடான்கள், ஹேட்ச்பேக்குகள் மற்றும் சிறிய SUVகளை தயாரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது" என மஹிந்திரா குழுமத்தின் MD & CEO டாக்டர் அனிஷ் ஷா தெரிவித்துள்ளார்.
ஹேட்ச்பேக்கை கைவிடும் உற்பத்தியாளர்கள்:
சந்தையின் சூழலை உணர்ந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா, “குறிப்பாக எஸ்யுவி கார் பிரிவில் தொழில்துறையின் சராசரியை காட்டிலும் நாங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம். தங்களது காரை மேம்படுத்த விரும்புவர்கள் மற்றும் முதல்முறையாக கார் வாங்குபவர்கள் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாகவே, பெரும்பாலான நிறுவனங்கள் மேம்பட்ட மற்றும் உயர் சந்தை அம்சங்களுடன் பல SUV மாடல்களை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.
எஸ்யுவிக்களின் தாறுமாறான வளர்ச்சி
தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் SUV-க்களின் விற்பனை முந்தைய ஆண்டை காட்டிலும் 23 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது. அதே நேரத்தில் ஹேட்ச்பேக் மாடல்கள் முந்தைய ஆண்டை காட்டிலும் 17 சதவிகிதம் சரிவைப் பதிவு செய்தன. இந்திய சந்தையில் பயணிகள் வாகன விற்பனையில் SUVகள் இப்போது 52 சதவிகித சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் ஹேட்ச்பேக்குகள் வெறும் 26 சதவிகித சந்தைப் பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளன, இது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிலான வீழ்ச்சி ஆகும். வரும் ஆண்டுகளில், எஸ்யூவி விற்பனை வலுவான வேகத்துடன் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
எஸ்யுவியை விரும்புவது ஏன்?
மொத்தத்தில், வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் தெளிவான மாற்றத்தைக் காணலாம், ஏனெனில் அவர்கள் இப்போது சிறிய அளவை விட சொகுசான, ஆடம்பரமான மற்றும் இடவசதி நிறைந்த காரை தேடுகிறார்கள். காரின் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவைகள் என பல அம்சங்களிலும் எஸ்யுவிக்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் பிரிவு, எஸ்யுவிக்களின் மலிவு விலை அழுத்தங்களால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.





















