Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq 7 Seater EV SUV: சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனம் தனது 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஆன, பீக் மாடலை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாம்.

Skoda Peaq 7 Seater EV SUV: ஸ்கோடா நிறுவனத்தின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஆன, பீக் மாடலின் அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஸ்கோடா பீக் 7 சீட்டர் EV SUV:
உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள விசியன் 7S கான்செப்டானது பீக் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் என ஸ்கோடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அடிப்படையில் இது ஒரு 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஆகும். சர்வதேச சந்தையில் மெர்டிசஸ் பென்ஸ் நிறுவனத்தின் GLB மற்றும் Peugeot e-5008 ஆகிய கார் மாடல்களுக்கு எதிராக போட்டியிட உள்ளது. முதன்மையான கார் மாடலாக உருவாவதால், பீக் மாடலானது ப்ராண்டின் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும். தற்போது அந்த நிலையை மின்சார காரான என்யாக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் கோடைகாலத்தில் புதிய மின்சார கார் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதைதொடர்ந்து அதிகாரப்பூர்வ அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா பீக் 7 சீட்டர் - என்ன எதிர்பார்க்கலாம்?
ஆட்டோமொபைல் எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட கான்செப்டை அப்படியே பின்பற்றி, மூன்று வரிசை இருக்கை அமைவுகளை கொண்ட மின்சார மாடலான பீக் காரானது 4.9 மீட்டர் நீளத்தை கொண்டிருக்கலாம். மேலும் தோல் அல்லாத அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற நிலையான பொருட்களை கேபினுக்குள் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. கான்செப்டில் 2+2+2 என்ற இருக்கை அமர்வு வழங்கப்பட்டு, மையப்பகுதியில் குழந்தைக்கு என ஒரு இருக்கை வழங்கப்பட்டு இருந்தது. உற்பத்தியில் இது அப்படியே தொடருமா? அல்லது 2+3+2 என்ற அமைப்பு வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஸ்கோடாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரீமியம் மின்சார வாகனமாக நிலைநிறுத்தப்பட உள்ள பீக், தாராளமான இடம் மற்றும் நீண்ட தூர பயன்பாட்டு வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு இருக்கைகள் கொண்ட இந்த மாடலானது வேலைக்கான பயன்பாடு, ஓய்வு நேர பயணம் மற்றும் குடும்பமாக பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கேபினில் பல எளிய புத்திசாலித்தனமான நடைமுறை டச்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா பீக் 7 சீட்டர் - பேட்டரி, ரேஞ்ச்..
எக்ஸ்போக்களில் காட்சிப்படுத்தப்பட்ட விசியன் 7எஸ் கான்செப்டில் 89KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருந்தது. அதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்பட்டது. பீக் மாடல் 200KW வரை வேகமாக சார்ஜ் ஆகும் என ஸ்கோடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தபடும்போது ஆல்-வீல் ட்ரைவ் மற்றும் ரியர் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா பீக் 7 சீட்டர் - விலை
ஸ்கோடாவின் தற்போதைய ஃப்ளாக்ஷீப் மாடலான என்யாக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் அதன் உள்ளூர் மதிப்பு 50 லட்சம் முதல் 65 லட்சம் வரை நீள்கிறது. இதை காட்டிலும் பீக் மாடல் ப்ரீமியமாக இருக்கும் என்பதால் அதன் விலை உள்ளூர் மதிப்பில் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலும் நீளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்கோடா பீக் 7 சீட்டர்
கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் விசியன் 7எஸ் மாடலின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக 2027ம் ஆண்டில் இரண்டாம் பாதியில் ஸ்கோடாவின் புதிய ஃப்ளாக்ஷீப் மாடலான பீக் காரும் உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
Skoda’s midsize battery electric crossover will officially be called the ‘Peaq.’ In addition, the CUV will make its debut before the year’s end with MEB underpinnings, Vision 7S-inspired styling, as well as up to around 335 hp and 373 miles of electric range. #Skoda #Peaq #BEVs pic.twitter.com/yLOAacQ0S9
— GearheadCole ⚙️ (@cole_marzen) January 14, 2026
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வாகன் குழுமம், இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 2025ம் ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டை காட்டிலும் 36 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டு விற்பனையுடன் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 500 யூனிட்களை எட்டியுள்ளது. இந்த சூழலை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் வகையில், புதிய பீக் மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது.




















