இந்தியாவில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411... விலை எவ்வளவு தெரியுமா?
ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411 மாடல் இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளதோடு, அதன் விலை 2.03 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411 மாடல் இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளதோடு, அதன் விலை 2.03 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை நிர்ணயம் சுமார் 2.08 லட்சம் ரூபாய் வரை மாறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான அட்வெஞ்சர் வாகனங்களுள் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மாடல்களின் வரிசையின் கீழ், ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411 குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411 மாடல் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யெஸ்டி ஸ்க்ரேம்ப்லெர், ஹோண்டா CB350RS ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411 மாடல், ஹிமாலயன் வகை மாடல்களின் வரிசையில் அட்வெஞ்சர் வாகனமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஸ்டாண்டர்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் கட்டுப்பாட்டுக் கருவி, சற்றே சிறிய முன்பக்க வீல், சாதாரண பேனல்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு முதலானவற்றோடு இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் விலை ஒப்பீட்டளவில் சற்றே குறைவாக இருக்கிறது. வெள்ளை, சில்வர், கறுப்பு, நீலம், கிராஃபைட் ரெட், மஞ்சள் முதலான நிறங்களிலும் ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 411 விற்பனை செய்யப்படுகிறது.
பழைய மாடல்களில் இருப்பதைப் போன்ற ஹெட்லாம்ப், முழுவதுமாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கருவி, எர்கானோமிக் வகையிலான வடிவமைப்பில் செய்யப்பட்ட வசதியான சீட், எல்.ஈ.டி ஹெட்லைட் முதலான வசதிகளும் இந்த மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்த மாடலின் முன்பக்க வீல் 19 இன்ச் அளவிலும், பின்பக்க வீல் 17 இன்ச் அளவிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மாடல்களைப் போலவே இதில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினில் இருந்து சுமார் 24.3 BhP, 32 Nm என்றளவிலான ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஸ்க்ரேம் மாடலுக்கென்று தனித்தன்மையாக இந்த ஆற்றல் கொண்ட வாகனமாக இதனை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நிலத்தில் இருந்து சுமார் 200 மில்லிமீட்டர் அளவிலான உயரத்தில் கிரவுண்ட் க்ளியரன்ஸ் தரும் இந்த மாடலை உயரத்தில் குறைந்தவர்களும் பயன்படுத்தும் வகையில், இதன் சீட்டின் உயரம் 795 மில்லிமீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் ராயல் என்ஃபீல்ட் மீட்டியார் 350 வாகனத்திலும், அடுத்ததாக ஹிமாலயன் மாடலிலும் கொடுக்கப்பட்டிருந்த ஆப்ஷனல் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் என்ற சிறப்பம்சம் தற்போது ஸ்க்ரேம் 411 மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் வழக்கமான கிட்டில் இடம்பெறாத செண்டர் ஸ்டேண்ட் இதில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.