Royal Enfield Himalayan 450: இந்தியாவில் வெளியானது ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 பைக் - புதுசா என்ன இருக்கு?
Royal Enfield Himalayan 450: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Royal Enfield Himalayan 450: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடலின் விலை, 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹிமாலயன் 450 மாடல்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடல் அட்வென்ச்சர் மோட்டர்சைக்கிள், கோவாவில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் மோட்டோவெர்ஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஹிமாலயன் 411 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் தான், புதிய ஹிமாலயன் 450 மாடல் ஆகும். இதன் தொடக்க விலை 2 லட்சத்து 69 ஆயிரமாகவும், அதிகபட்ச விலை 2 லட்சத்து 84 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விலையானது வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், அதற்கு பிறகு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விவரங்கள்:
வ. எண் | வேரியண்ட் | விலை |
1 | base (kaza brown) | ரூ. 2.69 லட்சம் |
2 | pass (Slate Himalayan Salt, Slate Poppy Blue) | ரூ. 2.74 லட்சம் |
3 | Summit (Kamet White) | ரூ. 2.79 லட்சம் |
4 | Summit (hanle black) | ரூ. 2.84 லட்சம் |
இந்த விலை நிர்ணயம் மூலம் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 மாடலானது, கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலுக்கு நேரடி போட்டியாக உருவெடுத்துள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
புதிய ஹிமாலயன் 450யின் மிக முக்கிய மாற்றமே, அதில் இடம்பெற்றுள்ள DOHC 452சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான். ஷெர்பா 450 என அழைக்கப்படும் இந்த புதிய மோட்டார் 8,000 ஆர்பிஎம்மில் 39.5 எச்பி ஆற்றலையும், 4,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழியாக புதிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும், லிட்டருக்கு 28 கிலோ மிட்டர் மலேஜ் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பு:
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450க்குக் கீழே ஒரு புதிய ஸ்டீல் ட்வின்-ஸ்பார் ட்யூபுலர் ஃபிரேம், இரட்டை பக்க ஸ்விங்கார்ம் உள்ளது. பிரெக்கிங்கிற்காக இரண்டு சக்கரங்களிலும் ரோட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் 21-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச்சிலான வயர்-ஸ்போக் சக்கரங்களில் டியூப்லெஸ் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று இருக்கை விருப்பங்கள் வழங்கப்படுகிறது. நிலையான இருக்கை உயரம் 825 மிமீ, குறைந்த இருக்கை உயரம் 825 மிமீ மற்றும் உயரமான இருக்கை உயரம் 845 மிமீ ஆகும். கூடுதலாக, இது இருக்கை உயரத்தை 855 மிமீக்கு தள்ளும் ரேலி கிட் உடன் வருகிறது. வீல்பேஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் முறையே 45 மிமீ மற்றும் 10 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. 196 கிலோ எடையிலான இந்த வாகனத்தில் அதிகபட்சமாக, 17 லிட்டர் எரிபொருளை நிரப்பலாம்.
சிறப்பம்சங்கள்:
புதிய ஹிமாலயன் 450 நிச்சயமாக ராயல் என்ஃபீல்ட் வழங்கும் மிகுந்த சிறப்பம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். முழு LED முகப்பு விளக்கு மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மிகப்பெரிய சிறப்பம்சமாக முழு-டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கூகுள் மேப்ஸ் மூலம் இயங்கும் இன்-பில்ட் நேவிகேஷன், புளூடூத் வழியாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு மற்றும் மியூசிக் பிளேபேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சி-டைப் USB சார்ஜிங் போர்ட், இரண்டு சவாரி ரைட் மோட்கள் உள்ளன.