Royal Enfield Bullet 650: இனி இது தான் டாப்பு - புல்லட் 650 என்ட்ரி, ராயல் என்ஃபீல்டின் புதிய பைக் - மொத்த விவரங்கள்
Royal Enfield Bullet 650: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புல்லட் 650 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Royal Enfield Bullet 650: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய புல்லட் 650 மோட்டார் சைக்கிளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார் சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் ப்ராண்டாக உள்ளது. இந்நிலையில் தான் அதன் மிகவும் பிரபலமான புல்லட் மாடலானது, நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் மாடல்கள் இடம்பெறும் 650சிசி பிரிவில் இணைந்துள்ளது. இது இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டின் வலுவான முன்னேற்றத்தை காட்டுகிறது.
மிலனில் நடந்த மோட்டார்ஷோவில் சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மோட்டோவெர்ஸ் 2025 மூலம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் க்ளாசிக் 650 ட்வின்னுக்கு கீழே நிலைநிறுத்தப்படும் புல்லட் 650 மோட்டார்சைக்கிளானது விரைவில் உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புல்லட் 650 - வடிவமைப்பு விவரங்கள்
புல்லட் என்பது ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அடையாளமாக கருதப்படும் மாடலாகும். எனவே புதிய 650 எடிஷனின் தோற்றமானது பாராம்பரியமான பாணியில் அப்படியே உள்ளது. அகலமான, வட்ட வடிவிலான எரிபொருள் டேங்கானது கைகளால் வரையப்பட்ட க்ளாசிக் பின் - ஸ்ட்ரைப்களை கொண்டுள்ளது. க்ரோம் ஃபினிஷ்ட் மட்கார்டானது பழைய புல்லட்களை அப்படியே பிரதிபலிக்கிறது. முன்புறத்தில் புல்லட்டின் அடையாளமாக கருதப்படும் பைலர் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. மாடலை சுற்றிலும் எல்இடி லைட்டிங் ஹார்ட்வேர் பயன்படுத்தப்பட்டாலும், ஒளிர்வது மற்றும் வடிவங்கள் ஆகியவை ஒரிஜினல் மாடலை போன்றே இருக்க ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மெனக்கெட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 (Source: X/Twitter)
புல்லட் 650 - இதர அம்சங்கள்:
சேசிஸ் அமைப்பு ப்ராண்டின் பழைய செட்-அப்பை அபடியே பின்பற்றுகிறது. இருன்பு இரட்டை-டவுன்டியூப் ஃப்ரேமானது முன்புறத்தில் 120 மிமீ பயணத்துடன் வழக்கமான தொலைநோக்கி ஃபோர்க்குகளை கொண்டிருக்கிறது. பின்புறம் 90 மிமீ வழங்கும் இரட்டை ஷாக் அப்சார்பர்களை பெறுகிறது. 19 அங்குல முன் மற்றும் 18 அங்குல பின்புறத்துடன் சக்கர அளவுகளும் கிளாசிக்காகவே இருக்கின்றன. இது வாகனத்தின் நிலைப்பாட்டை உயரமாக காட்சிப்படுத்துகிறது.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 இன் ப்ரேக்கிங் பணிகளானது 320 மிமீ முன் டிஸ்க் மற்றும் 300 மிமீ டிஸ்க் மூலம் கையாளப்படுகின்றன. 154மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உடன், 800 மிமீ உயரத்திலான இருக்கையை கொண்டுள்ளது. ஸ்டேண்டர்டாக டூயல்-சேனல் ABS அமைப்புடன் ஆதரிக்கப்படுகிறது. டயர்கள் முன்புறத்தில் 100/90 மற்றும் பின்புறத்தில் 140/70 அளவைக் கொண்டுள்ளன. இது சிறிய புல்லட்டில் காணப்படும் குறுகிய புரொஃபைலை விட சிறந்த நிலைத்தன்மையை வழங்கும். 2.3 மீட்டருக்கு மேல் நீளத்தை கொண்டு 243 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது.
புல்லட் 650 - இன்ஜின் விவரங்கள்
ப்ராண்டின் பெரிய லைன் - அப்பில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட 647.95சிசி பாரெல்லல் ட்வின் இன்ஜின் தான் புல்லட் 650 மாடலிலும் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 47 குதிரைகளின் சக்தி மற்றும் 52.3Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ஆனால், இது செயல்திறன் சார்ந்த வாகனம் அல்ல. மாறாக, ட்யூனிங் மென்மையான ரோல்-ஆன் டார்க் மற்றும் ரிலாக்ஸ்டு க்ரூஸிங்கை ஆதரிக்கிறது, ஏனெனில் இது டூரிங் இன்ஜினை தேடும் ரைடர்களை இலக்காகக் கொண்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட சிக்ஸ் ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெறுகிறது. எரிபொருள் டேங்கானது 14.8 லிட்டர் கொள்ளளவை பெற்றுள்ளது.
புல்லட் 650 - விலை, மற்ற விவரங்கள்
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு சந்தைகளில் புல்லட் 650 மாடலானது கேனன் ப்ளாக், பேட்டில்ஷிப் ப்ளூ போன்ற வண்ண விருப்பங்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதே நிறங்கள் தான் இந்தியாவிலும் கிடைக்குமென கூறப்படுகிறது. உள்நாட்டு சந்தைக்கான விலை வரம்பு குறித்த விவரங்கள் ஏதும் தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பலனை கருத்தில் கொண்டால், புதிய புல்லட் 650 மாடலின் விலை ரூ.3.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




















