Reliance Car: குறி வச்சாச்சு..! கார் தயாரிப்பில் இறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் - டாடா & மஹிந்திராவுடன் மோத முடிவு
Reliance EV Car: அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
Reliance EV Car: ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரிலையன்ஸ் ஈவி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.
கார் உற்பத்தியில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்:
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் கார் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறது. அனில் அம்பானி தலைமையிலான குழும நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் , மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிக்கும் திட்டத்தைமுன்னெடுத்துள்ளது. இதற்காக, சீனாவின் பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான BYD இன் முன்னாள் அதிகாரி உடன் ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் EV தயாரிக்கும் திறன்:
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் EV திட்டங்களை தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, EV ஆலையில் வரவிருக்கும் செலவுகளுக்கான ஆராய்ச்சியை அனில் அம்பானி ஏற்கனவே தொடங்கியுள்ளார். இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இதை உற்பத்தி திறனை 7.50 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கலாம். இது தவிர, நிறுவனம் 10 ஜிகாவாட் மணிநேரம் (GWh) திறன் கொண்ட பேட்டரி ஆலையை நிறுவ விரும்புகிறது. தற்போது ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்த திட்டம் பற்றி எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இதுதொடர்பான தகவல் வெளியானதில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
ரிலையன்ஸில் இணைந்த சஞ்சய் கோபாலகிருஷ்ணன்:
அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சமீபத்தில், மின்சார கார் திட்டத்திற்காக முன்னாள் BYD நிர்வாகியான சஞ்சய் கோபாலகிருஷ்ணனை இணைத்துக் கொண்டது. அவர் இந்த திட்டத்தில் ஆலோசகராக சேர்ந்துள்ளார். முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி, 2005ல் தனது தொழிலை பிரித்தார். அதன்பிறகு, அனில் அம்பானி தலைமையிலான குழுவால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், எரிவாயு, டெலிகாம் மற்றும் சில்லறை விற்பனை என பல துறைகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி ஆலை நிறுவும் முகேஷ் அம்பானி:
சமீபத்தில் முகேஷ் அம்பானியும் பேட்டரி தயாரிக்கும் ஆலையை அமைக்க விரும்புவதாக தகவல் வெளியானது. கூடுதலாக, டெஸ்லா தனது இந்திய ஆலைக்காக அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அனில் அம்பானி இந்தத் துறையில் முன்னேறினால், இரு சகோதரர்களுக்கு இடையே வியாபார மோதல் வரலாம். தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் மொத்த கார்களில் 2 சதவிகிதம் மட்டுமே EVகள். இதை 30 சதவிகிதமாக உயர்த்த அரசு விரும்புகிறது. இதற்காக EV, பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்திக்காக 5 பில்லியன் டாலர் திட்டத்தை நடத்தி வருகிறது.
ரிலையன்ஸ் ஈவி பிரைவேட் லிமிடெட்
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனது கார் திட்டத்திற்காக சீனா உட்பட பல இடங்களில் கூட்டாளர்களைத் தேடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இரண்டு துணை நிறுவனங்களையும் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இவற்றில் ஒன்று ரிலையன்ஸ் ஈவி பிரைவேட் லிமிடெட். டாடா மோட்டார்ஸ் தற்போது 70 சதவிகித பங்கைக் கொண்டு இந்தத் துறையில் மிகப்பெரிய EV தயாரிப்பாளராக உள்ளது. சமீபத்தில் மஹிந்திரா பல EV மாடல்களை காட்சிப்படுத்தியது. மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களது EV மாடல்களை 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.