Renault Cars: பேரு மட்டுமில்ல, வண்டிங்க கூட வேற ரகம் தான் - ரெனால்டின் 4 கார்கள் - டஸ்டர விடு, பிக்ஸ்டர கவனி
New Renault Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள, 4 கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

New Renault Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள, 4 கார் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரெனால்டின் 4 புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய இடைவெளி ஏதுமின்றி அடுத்தடுத்து புத்தம் புது கார்கள் அறிமுகமாகி வருகின்றன. அவற்றின் போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் விதமாக, ரெனால்ட் நிறுவனம் 2025-26 காலகட்டத்தில் அடுத்தடுத்து புதிய அப்டேடட் வெர்ஷன் மற்றும் முற்றிலும் புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் ஏற்கனவே உள்ள இரண்டு கார்களுக்கான மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் இரண்டு முற்றிலும் புதிய கார்களும் அடங்கும். சாலை சோதனையின்போது எடுக்கப்பட்ட இந்த கார்களின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த கார்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய சந்தையில் வரும் ஜுலை 23ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள, ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலானது பலமுறை சாலை சோதனையின்போது சிக்கியுள்ளது. இந்த 7 சீட்டர் மல்டி பர்பஸ் வாகனமானது வெளிப்புறத்தில் விரிவான அப்டேட்களை பெறுகிறது. இதில் புதிய முகப்பு பகுதி, திருத்தப்பட்ட பம்பர் மற்றும் புதிய வீல்கள் ஆகியவை அடங்கும். உட்புறத்தில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டு டேஷ்போர்டில் சிறிய அளவிலான அப்கிரேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இன்ஜின் அடிப்படையில் பெரியதாக எந்தவித மாற்றமும் இன்றி, அதே பிரபலமான 1.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 20 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 18.2 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என பயனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய ட்ரைபர் கார் மாடலின் விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை நீள்கிறது. புதியதாக பெற உள்ள அப்கிரேட்களால் இதன் விலை சற்றே உயரலாம். இந்திய சந்தையில் மாருதி சுசூகி எர்டிகா, டொயோட்டா ருமியன் மற்றும் கியா காரென்ஸ் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
2. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்
கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல்முறையாக மிட்-லைஃப் அப்டேட் பெறும், கைகர் ஃபேஸ்லிஃப்டானது வரும் பண்டிகைக் காலத்தின்போது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவின் சாலை சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம், கூர்மையான முன்புறம் உள்ளிட்ட சில அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப், ஃபாக் லேம்ப்ஸ், பெரிய கீழிறக்கப்பட்ட க்ரில் ஆகியவை அடங்கும். லேசான மாற்றங்களுடன் உட்புறத்தில் உள்ள டேஷ்போர்ட் லே-அவுட்டிலும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி, 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளன. லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என பயனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காரின் விலை ரூ.6.15 லட்சத்தில் தொடங்கி ரூ.12.67 லட்சம் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் எக்ஸ்டெர், டாடா பஞ்ச், நிசான் மேக்னைட். ஹுண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
3. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர்
ரெனால்டின் மூன்றாவது தலைமுறை டஸ்டர் கார் மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டுதொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. CMF-B பிளாட்ஃபார்மில் புதிய காரை தயாரித்து வருவதை ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இயந்திர அடிப்படையில் இந்த காரில், 154bhp மற்றும் 250Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 140bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனையும் இந்திய சந்தைக்கு கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் போது புதிய தலைமுறை டஸ்டர் காரானாது, ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும்.
4. ரெனால்ட் பிக்ஸ்டர் 7 சீட்டர் எஸ்யுவி:
டஸ்டர் கார் மாடலின் தொடர்ச்சியாக ரெனால்ட் நிறுவனம், புதிய 7 சீட்டர் எஸ்யுவியை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. போரியல் மாடலின் இந்திய வெர்ஷனாக உருவாகி வரும் இந்த கார் மூன்று இருக்கை வரிசைகளை கொண்டுள்ளது. டஸ்டரில் உள்ள CMF-B பிளாட்ஃபார்மில் இதில் அப்படியே தொடரப்பட்டாலும், அதை காட்டிலும் நீளமாக இருக்கும். வீல்பேஸும் நீட்டிக்கப்பட்டதாக இருக்கும். புதிய பிக்ஸ்டர் எஸ்யுவி ஆனது டஸ்டரில் உள்ள பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை அப்ப்டியே தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு சந்தையில் இந்த காரின் விலை ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஹுண்டாய் அல்கசார், டாடா சஃபாரி, மஹிந்திரா XUV 700 உள்ளிட்ட கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.





















