Lexus RX SUV: ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி மூலம் இந்தியாவில் அறிமுகமாகிறது லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX SUV கார்..!
லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX SUV கார் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி மூலம், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில் வரும் 11ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரையில் பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஒரே சொகுசு கார் நிறுவனம் லெக்சஸ். அந்நிறுவனம், தனது புதிய RX SUV கார் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ES செடான் மற்றும் NX SUV கார் வரிசையில், ஹைப்ரிட் பவர்ட்ரெயின் கொண்ட லெக்சஸ் நிறுவனத்தின் மற்றொரு முக்கிய கார் மாடலாக RX SUV இந்திய சந்தையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
RX கார் மாடல்கள் உலகளவில் அதிகம் விற்பனையாகும் லெக்ஸஸ் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புதிய ஜெனரேஷன் கார் மாடல் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முந்தைய மாடலை விட உருவத்தில் பெரியதாகவும், ஸ்போர்ட்ஸ் வாகனத்தின் தோற்றத்தையும் கொண்டுள்ளது. 14 இன்ச் தொடுதிரை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. ஓட்டுனருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகள், வழக்கமான தோல் பொருட்களுக்கு மாற்றாக வீகன் தோல் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. லாங்கர் வீல் பேஸ் உடன் அதிகப்படியான இடவசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பைகள் போன்ற உடைமைகளை வைப்பதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் விவரம்:
இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள காரில் RX 350h மாடல் இன்ஜின் இடம்பெற உள்ளது. முந்தைய தலைமுறை RX ஐ விட அதிக சக்தியுடன் 2.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 245 ஹார்ஸ்பவரின் சக்தியை கொண்டுள்ளது. ஜீரோவிலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை இந்த வாகனம் வெறும் 8 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய RX ஆனது முழு அளவிலான சொகுசு SUV ஆகும். இது இந்தியாவில் NX மாடல் காருக்கு மேல் வகைப்படுத்தப்பட உள்ளது.
விலை விவரம்:
புதிய தலைமுறை எல்-எக்ஸ் காருடன், மற்றொரு சுவாரஸ்யமாக எல்எஃப்-இசட் மாடல் கான்செப்ட் காரும் ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. LX மாடலனது அந்நிறுவனத்தின் முதன்மையான சொகுசு SUV காராக உலகளவில் கிடைக்கிறது. இது பெரிய பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது. LX தவிர, புதிய RX ஆனது ES செடான் மற்றும் NX SUV உடன் இந்திய சந்தையில் லெக்ஸஸின் முக்கிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய காரின் விலையானது, ஆட்டோ எக்ஸ்போவின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.