CM MK Stalin: அடுத்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சி.. ஒளிமயமான எதிர்காலம் தான்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி!
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை உயர்ந்து பார்க்கிறார்கள். இவையெல்லாம் தான் என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலுரை கொடுக்கும் நிகழ்வில் பேசிய அவர், “2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 6வது முறையாக வெற்றிப் பெற்றது. ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சி இருந்தாலும், மறுபக்கம் கவலை இருந்தது. இதனை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த பொறுப்பை எப்படி செய்யப்போகிறேன், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா, மக்கள் விரும்பும் வகையில், மகிழ்ச்சியடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா என்ற கவலை எனக்கு இருந்தது.
முந்தைய 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும், அனைத்து வகையிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்திருந்தது. அதனை சரி செய்வது, அதனையடுத்து மத்திய அரசு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த 2 நெருக்கடிகளையும் எதிர்கொள்வது தான் எனக்கு கவலைக்கு காரணமாக அமைந்தது. இடியாப்ப சிக்கல் என்ற நிலையில் தான் ஆட்சிக்கு வந்தோம்.
LIVE TN Assembly | ஸ்டாலின், EPS நேருக்கு நேர்! அனல்பறக்கும் வாக்குவாதம்! சட்டப்பேரவையில் காரசாரம்! https://t.co/xqSoyTKEUA
— ABP Nadu (@abpnadu) January 24, 2026
ஆனால் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் இப்போது சொல்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொன்னால் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கில் நான் வெற்றி பெற்று விட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலை நிமிர்ந்து விட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சி வழங்குகிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட அதிகம் வளர்ந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை புருவம் உயர்த்தி பார்க்கிறார்கள். இவையெல்லாம் தான் என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.
அடுத்ததாக இன்னும் பெருமையோடும், தன்னம்பிக்கையோடும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அடுத்து நாங்கள் அமைக்கவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும். இந்த 5 ஆண்டுகள் வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதிலும், முகத்திலும் மனநிறைவான மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன்" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் எனக்கும் எனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி வந்திருக்கிறேன். என்னை சீண்டிப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடையலாமே தவிர அது என்னை ஒன்றும் செய்யாது எனவும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






















