Expensive EV Cars: இந்திய சந்தையில் விலையுயர்ந்த மின்சார கார்களின் பட்டியல்... டாப் 5 லிஸ்ட் இதோ..!
Most Expensive EV Cars in India: இந்திய சந்தையில் கிடைக்கும் விலைமதிப்புமிக்க மின்சார கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Most Expensive EV Cars in India: இந்திய சந்தையில் கிடைக்கும் விலைமதிப்புமிக்க மின்சார கார்களின் பட்டியலில், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.
இந்திய மின்சார கார் சந்தை:
டெஸ்லா எனும் வெளிநாட்டு நிறுவனம் மின்சார கார்களை அறிமுகப்படுத்தியபோது, உலகில் யாருமே எதிர்பார்த்திடவில்லை அந்நிறுவனம் ஆட்டோமொபைல் சந்தையில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று. காரணம், இன்ஜினில் இயங்கும் கார்களை தயாரிக்கும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தற்போது மின்சார கார் உற்பத்தியில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. அதன் விளைவாக பேஸ் வேரியண்ட் தொடங்கி டாப் டிரிம் என ஏராளமான மின்சார வாகனங்கள் இந்தியாவிலும் அறிமுகமாகி விற்பனையாகி வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும், விலை மதிப்புமிக்க டாப்-5 மின்சார கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
05. Audi RS e-Tron GT:
இந்திய சந்தையில் அதிக விலையில் கிடைக்கும் மின்சார வாகனங்களின் டாப் 5 லிஸ்டில், ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி ஆகும். இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் காரில் 646 ஹெச்பி பவர் மற்றும் 830 என்எம் டார்க்கை வெளியிடும் இரட்டை மின்சார மோட்டார்களுடன் 93 கிலோவாட் பேட்டரி பேக் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் இந்த கார், 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடும். பின்புற மோட்டாருக்கு 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடியின் விலை இந்தியாவில் ரூ.1.95 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
04. BMW i7:
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது BMW i7 ஆகும். இது 536 hp மற்றும் 745 Nm முறுக்குவிசையை வெளிப்படுத்தும் மின்சார மோட்டார்களுடன், 101 kWh பேட்டரி பேக்கில் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 239km வேகத்தில் செல்லும். சொகுசு EV ஆனது WLTP சுழற்சியில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிமீ தூரம் வரை செல்லும். i7க்கான விலை ரூ. 2.1 கோடியில் தொடங்குகிறது.
03. Porsche Taycan Turbo S:
Porsche Taycan Turbo S மாடல் நாட்டின் விலைமதிப்புமிக்க, மின்சார கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது 761 PS ஆற்றலையும் 1050 Nm முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார்களுடன் 93 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இது வெறும் 2.6 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்றும், மணிக்கு 260 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Porsche Taycan Turbo S காரின் விலை 2.43 கோடி ரூபாயில் தொடங்குகிறது.
02. Mercedes-AMG EQS 53 4- Matic+
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள Mercedes-AMG EQS 53 4- Matic+ மாடல் காரின் விலை, இந்திய சந்தையில் ரூ.2.45 கோடியில் இருந்து தொடங்குகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், 400V, 107.8 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் மற்றும் இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைந்து 761 hp ஆற்றலையும் 1020 Nm முறுக்குவிசையையும் வெளிப்படுத்துகிறது. மணிக்கு 1000 கிலோ மீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த கார் 586 கிமீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
01. Rolls Royce Spectre:
இந்திய ஆட்ரோமொபைல் சந்தையில் விலைமதிப்புமிக்க மின்சார கார்களின் பட்டியலில், விலையை கேட்போரின் புருவங்களை உயர்த்தச் செய்யும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டர் கார் மாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 7.5 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ள 102kWh பேட்டரி பேக், 585 hp மற்றும் 900 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 530 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5 விநாடிகளில் எட்டுகிறது.