ரூ.20,000 தான் சம்பளமா? கார் வாங்கணும்னு ஆசையா? எந்த கார், எப்படி வாங்கலாம் - கவனிக்க வேண்டியவை
Budget Cars: மாத வருமானம் 20 ஆயிரம் ரூபாயை மட்டுமே கொண்டவர்கள் வாங்க ஏதுவான, கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget Cars: மாத வருமானம் 20 ஆயிரம் ரூபாயை மட்டுமே கொண்டவர்கள் கார் வாங்கும்போது, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
பட்ஜெட் கார்கள்:
மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் ரூபாயாக இருக்கும்போது கார் வாங்க விரும்பினால், நீங்கள் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கும். காரணம் வழக்கமான மாதந்திர செலவுகளுடன், காருக்கான பராமரிப்பு, மாதாந்திர தவணை (தவணை முறையில் வாங்கினால்), இன்சூரன்ஸ் என பல்வேறு செலவுகளையும் நீங்கள் கையாள வேண்டி இருக்கும். அதேநேரம், பாதுகாப்பு, எரிபொருள் திறன் ஆகியவற்றிலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதன்படி, மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயை கொண்டவர்கள் வாங்கக் கூடிய கார் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்:
- உங்களது ஆண்டு வருமானத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. அதாவது 20 ஆயிர்ம் ரூபாய் ஊதியத்தில், ரூ.2.40 லட்சம் மட்டுமே உங்களது ஆண்டு வருவாய். எனவே, அதில் ரூ.1.2 லட்சம் மட்டுமே காருக்கு செலவழிக்க வேண்டும்.
- 20 சதவிகித டவுன் பேமண்ட், 4 ஆண்டுகளுக்கு தவணை செலுத்தும் வகையில், காருக்கனா மாத செலவினம் உங்களது மொத்த வருவாயில் 10 சதவிகிதத்திகு மிகாதபடி, 20/4/10 என்ற வழிமுறையை பின்பற்றுங்கள்
- 30-50 % குறைந்த விலையில் செக்ண்ட் ஹேண்ட் கார்களும் நல்ல தேர்வாக இருக்கும். ஆனால், அதன் பராமரிப்பு வரலாறு அவசியம். புதிய வாகங்களில் கேரண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 3 கார் மாடல்கள்:
1. மாருதி சுசூகி: ஆல்டோ K10 - ரூ.4 -5.5 லட்சம்
இந்தியாவிலேயே மிகவும் மலிவு விலை காராக மாருதி சுசூகி ஆல்டோ கே10 திகழ்கிறது. பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 24 கிலோ மீட்டரும், சிஎன்ஜி வேரியண்ட் கிலோவிற்கு 33 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது. குறைந்த பராமரிப்பு செலவு, பரந்த சேவை மையங்கள் போன்றவற்றோடு, சிறிய குடும்பங்களுக்கு ஏற்றது மற்றும் முதல்முறையாக கார் வாங்குபவர்கலுக்கு சரியான தேர்வாக இருக்கும். மேற்குறிப்பிட்ட 20/4/10 விதியின் படி, ஆல்டோ கே10 மாடல் கார் வாங்கும்போது 20 சதவிகிதம் மட்டுமே டவுன் பேமண்ட் செலுத்தினால், 9 சதவிகித வட்டியில் 4 ஆண்டுகளுக்கு நீங்கள் மாதம் ரூ.9000 தவணை செலுத்த வேண்டி இருக்கும். கைவசம் ஏதேனும் சேமிப்பு இருந்து, டவுன் பேமண்ட் ஆக ரூ.2.25 லட்சம் செலுத்தினால், உங்களது மாத தவணை ரூ.4,500 ஆக சரியும்.
நன்மைகள்:
- எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவு அதிகபட்சம் ரூ.3,000 வரை நீளும்
- ஆண்டு இன்சூரன்ஸ் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை
- 3 வருடங்கள் வரை வாரண்டி
சிக்கல்:
- அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமே இருக்கும்
- பெரிய குடும்பங்களுக்கு சரியான தேர்வாக இருக்காது
2. ரெனால்ட் க்விட்: ரூ.5 -6.5 லட்சம்
மலிவு விலை, எஸ்யுவி மாதிரியான வடிவமைப்பு மற்றும் ஆல்டோவுடன் ஒப்பிடுகையில் கூடுதல் அம்சங்களுடன் நல்ல தேர்வாக உள்ளது. எளிதான பராமரிப்பு செலவுடன், லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. வாகனத்தின் வடிவமைப்பையும் கருத்தில் கொண்டால் மட்டும் இந்த காரை தேர்வு செய்யலாம். மேற்குறிப்பிட்ட 20/4/10 விதியின் படி, 20 சதவிகிதம் அதாவது ரூ.1.1 லட்சம் மட்டுமே முன்தொகை செலுத்தினால், 9 சதவிகித வட்டியுடன் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் தவணை செலுத்த வேண்டி இருக்கும். எனவே, ஏதேனும் கைவசம் சேமிப்பு இருந்தால் அதிலிருந்து ரூ.3 லட்சத்தை முன்பணமாக செலுத்தினால், உங்களது மாத தவணை ரூ.5,500 ஆக குறையும்.
நன்மைகள்:
- டாப் வேரியண்ட்களில் டச் ஸ்க்ரீன், ரிவர்ஸ் கேமரா போன்ற உயர்தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன
- பராமரிப்பு எரிபொருள் என மாத செலவு ரூ.3.500-க்குள் அடங்கும்
- ஆண்டு இன்சூரன்ஸ் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை
சிக்கல்:
- பாதுகாப்பு அம்சங்கள் குறைவாகவே உள்ளன
- ஆல்டோவை விட கூடுதல் விலை
3. மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ: ரூ.4.8 -6.5 லட்சம்
பட்ஜெட்டில் கிடைக்கக் கூடிய இந்த சிறிய எஸ்யுவி, மிதமான கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் இந்த கார், நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. சேமிப்பு ஏதும் இன்றி 20 சதவிகித முன்பணம் மட்டுமே செலுத்தினால், 4 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தவணை செலுத்த வேண்டி இருக்கும்.
நன்மைகள்:
- ஆல்டோவை காட்டிலும் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், மோசமான சாலைகளிலும் திறம்பட பயன்படுத்தலாம்
- பராமரிப்பு எரிபொருள் என மாத செலவு ரூ.3.500-க்குள் அடங்கும்
- ஆண்டு இன்சூரன்ஸ் ரூ.12,000 முதல் ரூ.14,000 வரை
சிக்கல்:
- அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே உள்ளன
- போதுமான கேபின் வசதி இல்லை
செகண்ட் ஹேண்ட் கார்கள்:
மேற்குறிப்பிடப்பட்டவை தவிர, 3 முதல் 5 ஆண்டுகள் பழமையான செக்ண்ட் ஹேண்ட் ஹேட்ச் பேக் கார்களை வாங்குவதும் உங்களுக்கு நல்ல பலன் அளிக்கலாம். அதன்படி, மாருதி சுசூகி ஆல்டோ 800/ கே10, ஹுண்டாய் சாண்ட்ரோ, மாருதி சுசூகி வேகன் ஆர் ஆகியவை குறைந்த பட்ஜெட்டிலேயே கிடைக்கும். பட்ஜெட்டில் எதிர்பார்ப்பவர்களுக்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இவை நல்ல தேர்வாக இருக்கும்.




















