Mercedes-Benz GLS: இந்தியாவில் 2024ல் அறிமுகமாகும் முதல் கார் - மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்: பல புதிய அப்டேட்கள்!
Mercedes-Benz GLS Facelift: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவவனத்தின் ஜிஎல்எஸ் பேஸ்லிப்ட் மாடல் தான், நடப்பாண்டு இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் முதல் காராக அறிமுகமாக உள்ளது.
Mercedes-Benz GLS Facelift: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவவனத்தின் ஜிஎல்எஸ் பேஸ்லிப்ட் மாடல், வரும் 8ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவவனத்தின் ஜிஎல்எஸ் பேஸ்லிப்ட்:
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், திட்டமிட்டபடியே 10 கார் மாடல்களை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது மின்சார வாகனமான EQE உடன் GLC மற்றும் AMG SL 55 Roadster போன்ற கார் மாடல்களும் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. அந்த வரிசையில் நடப்பாண்டிலும் பல புதிய மாடல் கார்களை கொண்டு வர மெர்சிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் வாகனமாக GLS Facelift மாடல் கார் வரும் 8ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ள முதல் காரும் இதுவாக தான் இருக்கும். இந்த காரின் விலை விவரம் அறிமுக நிகழ்ச்சியின் போது வெள்யிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mercedes-Benz GLS Facelift:
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலான GLS, தற்போது பேஸ்லிப்ட் அடிப்படையில் சில அப்டேட்களை பெற உள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க சில புதுப்பிப்புகள் வழங்கப்பட உள்ளன. இது இந்திய சந்தையில் சிறந்த சாலை தோற்றத்துடன் வரும். அனைத்து பெரிய மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் இருந்தபோதிலும், SUV அதன் பழைய அழகை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய மாற்றங்கள் என்ன?
காரில் வழங்கப்பட்டுள்ள பெரிய மாற்றங்களை பொறுத்தவரையில், கிங்-சைஸ் எஸ்யூவி ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், புதுப்பிக்கப்பட்ட எல்.ஈ.டி முகப்பு விளக்கு, புதிய முன் கிரில்ஸ் மற்றும் உயர்-பளபளப்பான கருப்பு சுற்றுகள் போன்றவற்றுடன் வரும். மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மற்றும் சாலைத் தோற்றத்தைக் காட்டுவதோடு, புதுப்பிக்கப்பட்ட பின்புறப் பகுதியையும் இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புற மாற்றம் என்ன?
உட்புறத்தில் தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய அப்ஹோல்ஸ்டரி, புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்ட் போன்ற சில வலுவான அம்சங்களை கொண்டுள்ளது. MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டு, மூன்று டிஸ்பிளே முறைகளை வழங்குகிறது. சிறந்த பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட காட்சியை வழங்க, வாகனம் பெரிய பார்க்கிங் பேக்கேஜை வழங்கும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் 360-டிகிரி வியூ கேமராவானது குறைந்த வேகம் மற்றும் ஆஃப்ரோட் பயன்முறையில் வேலை செய்டும். முன்புற பம்பரின் அடிப்புறம் மட்டுமின்றி சுற்றுப்புற காட்சிகளையும் கூர்மையாக வழங்கும்.
பவர் டிரெயினில் மாற்றமா?
இதுவரை வெளியான தகவல்களின்படி இயந்திரப் பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 6000-6500rpm இல் 549 bhp மற்றும் 2500-4500rpm இல் 730Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0-லிட்டர் டீசல் இன்ஜின் இந்த மாடலிலும் தொடருகிறது. இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.